ஒரே கூட்டணியில் இணைகிறதா..? விசிக – பாமக
விசிகவும் பாமகவும் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. அதுபோலவே ராமதாஸும், திருமாவளவனும் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தனர். ஆனால் இளவரசன் – திவ்யா காதல் திருமணத்தால் எழுந்த பிரச்னை விசிக – பாமக உறவில் விரிசலை உண்டாக்கி மிகப்பெரிய மோதலை ஏற்படுத்தியது. அதன்பிறகும் பொன்பரப்பி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விசிக – பாமக இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருகிறார். பாமகவினரும் விசிகவை விமர்சித்து வருகின்றனர். எனினும் மோதலுக்கு முன்பு தன்னை மகன் போல கவனித்தவர் ராமதாஸ் என திருமாவளவன் பல இடங்களில் நெகிழ்வுடன் கூறியுள்ளார் இதனிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு விசிக முக்கிய நிர்வாகி வரவேற்பு தெரிவித்துள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் உறவு ஏற்படுமா என்ற கேள்விகளும் முளைத்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என சில பெற்றோர் கூறியதாக செய்தி வெளியானது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி, “பட்டியலின சகோதரர்களும் மனிதர்கள் தான். உணவை சமைத்தவர் பட்டியலினத்தவர் என்பதால், உணவை சாப்பிடக் கூடாது என்று குழந்தைகளைத் தடுப்பது மிகக் கொடிய தீண்டாமைக் குற்றம். உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான செய்தியை பகிர்ந்த விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில், “தீண்டாமைக்கு எதிரான மருத்துவர் அன்புமணியின் கூற்று ஆறுதல் தருகிறது. இது தொடரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். விசிகவைச் சேர்ந்த முக்கிய தலைவரே அன்புமணி கூற்றை வரவேற்றுள்ளது அரசியல் தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. திருமாவளவன் அனுமதி இல்லாமல் இந்த பதிவை அவர் போட்டிருக்க மாட்டார். ஆக, மீண்டும் இரு கட்சிகளுக்கும் உறவு துளிர்க்குமா? என்றெல்லாம் அரசியல் அரங்கில் கேள்விகள் எழுந்தன.
ஆனாலும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் யார் எதிர்த்தாலும் அதனை விசிக வரவேற்கும், ஆதரிக்கவும் செய்யும். அதனடிப்படையில் எதிர் கருத்தைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் பட்டியலின பிரச்னையில் அன்புமணி கொடுத்துள்ளார் என்பதற்காக தனது தனிப்பட்ட கருத்தை சிந்தனைச் செல்வன் பதிவு செய்தார் என்கிறார்கள் விசிகவினர்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் விழாவில் அவருடைய சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரிடம் பாமகவும் விசிகவும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “அரசியல் களத்தில் எந்தெந்த கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்” என்று கூறினார். அதாவது, பாமகவுடன் விசிக கூட்டணி வைக்காது என்பதை அவர் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான முயற்சிகள் சில மாதங்களுக்கு முன்பு திரைமறைவாக நடந்து வந்த நிலையில், திருமாவளவனின் சீற்றம் வெளிப்பட்டது. இதுதொடர்பாக ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “பதவிக்காக கொள்கையை விற்பவன் இந்த திருமாவளவன் கிடையாது. பதவிக்காக கூட்டணியில் இருப்பவனும் நான் இல்லை. பதவி என் தலைமுடிக்கு சமானம். கொள்கைக்கு ஒரு ஆபத்து என்றால் பதவியை தூக்கி எறியவும் நான் தயார். இப்போது சொல்கிறேன்.. பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் இந்த திருமாவளவன் இருக்க மாட்டான்” எனப் பேசினார்.
திருமாவளவனின் இந்த அணுகுமுறையானது திமுக தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இருந்தது. நீங்கள் பாமகவை சேர்த்துக் கொள்வீர்கள் என்றால், கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என மறைமுகமாக திமுகவுக்கு உணர்த்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு இருந்தது. இதனால் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என்ற நிலை உருவானது.
இந்நிலையில், திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் பலரும் விசிக – பாமக கூட்டணி இணையப் போவதாக பேசி வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராமசாமி படையாச்சியாரின் 106-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆண்டுதோறும் ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு விசிக சார்பில் மாலை அணிவித்து நன்றி செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கும் சூழலில், அவருடைய குடும்ப வாரிசாகவும், கொள்கை வாரிசாகவும் இருக்கக் கூடிய ராமதாஸ், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய அணுகுமுறைகளை கொண்டிருக்கிறார். எனவே நாங்கள் ஒரே களத்தில் ஒற்றுமையாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதைதான் பல நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டு, விசிக – பாமக கூட்டணி உருவாகப் போவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் பேட்டியில் திருமாவளவன் குறிப்பிட்டது பாமக நிறுவனர் ராமதாஸை அல்ல. ராமசாமி படையாச்சியின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.எஸ்.ஆர். ராமதாஸை தான் அவர் குறிப்பிட்டு பேசினார். ராமதாஸுடன் இணைந்து ஒரே களத்தில் நிற்போம் என திருமாவளவன் பேசியதால், அவர் பாமக நிறுவனர் ராமதாஸை தான் குறிப்பிடுகிறார் என பலரும் நினைத்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
– சிவா