தமிழக அரசியல் வரலாற்றில் உயிரோடு இருக்கும் போது சிலை அமைக்கப்பட்ட வரலாறு முன்னாள் முதல் அ¬ம்சசர்கள் காமராஜர், கலைஞர் ஆகிய இருவருக்கும் மட்டும்தான் அமைந்தது. மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர் உயிரோடு இருக்கும் போதே அண்ணா சாலையில் சிலை அமைக்கப்பட்டது.
வலது கையை உயர்த்தி இரண்டு விரல்களை மடக்கி மூன்று விரல்களை காட்டிய மாதிரி கலைஞரின் முழு உருவ சிலை இருந்தது. அதுதான் கலைஞருக்காக அமைக்கப்பட்ட முதல் சிலை. கலைஞருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று முதன்முதலில் அறிக்கை விட்டவர் தந்தை பெரியார். அப்போது அண்ணாவின் ஆட்சிக்காலம். அதன்பிறகு 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று மறுபடியும் கூறினார் பெரியார்.
பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக்கூட்டத்தில் பெரியார் பேசும்போது தன்னுடைய குருகுல மாணவரான கலைஞர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாக அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியதோடு சிலை அமைப்பு குழுவையும் அறிவித்தார் பெரியார். அதே மேடையில் அமர்ந்திருந்த கலைஞர் திமுக சார்பில் உங்களுக்கு சிலை வைத்ததற்கு பிறகு எனக்கு சிலை அமைப்பது பற்றி பிறகு பார்க்கலாம் என்று கூறி பெரியார் சிலை அமைப்புக்குழுவை அறிவித்தார்.
அதன்பிறகு 1973ம் ஆண்டு பெரியார் மறைவிற்கு பிறகு அப்போதைய திராவிடர் கழக தலைவர் மணியம்மை முன்னிலையில் பெரியார் சிலையை திறந்து வைத்தார், முதல் அமைச்சராக இருந்த கலைஞர். இவ்வாறு எழுப்பப்பட்டது தான் சென்னை அண்ணா சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலை. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை பேசும் போது நீங்கள் கூறியது போல் பெரியாருக்கு சிலை அமைத்து விட்டீர்கள். அதேபோல் பெரியாரின் விருப்பம் போல் அண்ணா சாலையில் உங்களுக்கு சிலை எழுப்பப்படும். அதை நீங்கள் தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கலைஞரிடம் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் கலைஞருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் வெற்றி பெற்ற திராவிடர் கழகம் அண்ணா சாலையில் 1975ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையயை மணியம்மை முன்னிலையில் குன்றக்குடி அடிகள் திறந்துவைத்தார்.
கலைஞர் சிலை திறக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்தது.
1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அப்போது சென்னை மாநகரம் முழுவதும் பதற்றத்துடன் இருந்தது. அப்போது கலவரத்தில் சிலர் அண்ணா சாலையில் இருந்த கலைஞரின் சிலையயை கடப்பாறையால் சேதப்படுத்தி சிலையை இடித்துத் தள்ளினார்கள். கலைஞரின் சிலை சேதப்படுத்திய காட்சி மறுநாள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தது. இந்த நிகழ்வு குறித்து சில வரிக்கவிதைகளுடன் தனது கருத்தை வெளிப்படுத்தினார் கலைஞர். அதில் “செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, என் நெஞ்சிலே தான் குத்துகிறான் அதனால் நிம்மதி எனக்கு வாழ்க வாழ்க” என முரசொலியில் தனது கவிதையை எழுதியிருந்தார் கலைஞர்.
அதன்பிறகு அதே இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று திராவிடர் கழகம் கலைஞரிடம் அனுமதி கேட்டும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் கலைஞர். இந்த நிலையில் கலைஞர் ஆட்சியிலிருந்த போதே அவரது சிலை இருந்த பீடத்தையும் அகற்ற உத்தரவிட்டார்.
அதனபிறகு கலைஞர் சிலை வைக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் உட்பட யாருமே குரல் எழுப்பவில்லை. அதன்பிறகு கலைஞர் மறைவிற்கு பிறகு அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று திராவிடர் கழகத்தலைவர் வீரமணி அறிவித்ததோடு முதல்வர் ஸ்டாலினிடம் தனது கோரிக்கையையும் முன்வைத்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின் அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஆகியோருக்கு சிலைகள் இருப்பதைப்போன்று கலைஞரின் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என திராவிடர் கழகத்தலைவர் வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து அண்ணா சாலையில் கலைஞரின் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின்.
அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே பெரியார் சிலை, அதற்கடுத்து வாலாஜா சாலை சந்திப்பில் அண்ணா சிலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில் எம்ஜிஆர் சிலை என்று வரிசையாக காணப்பட்ட சிலைகளுக்கு இடையில் இருந்த கலைஞரின் சிலைதான் காணாமல் போனது அந்த இடைவெளி நிரப்பப்படும் என்று 46 ஆண்டுகளுக்கு பிறகு பேரவையில் அறிவித்திருக்கிளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். கலைஞரின் சிலை மீண்டும் அதே இடத்தில் சில நாட்களில் எழ இருக்கிறது.
– சூரியன்