தமிழகம்

ஃபேஸ்புக்கில் பெண்கள் மட்டுமே இலக்கு… லட்சக்கணக்கில் மோசடி…

சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது மனைவி ராக்கி கட்டோலயா கீழ்ப்பாக்கத்தில் அழகு நிலையக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சூளை பகுதியைச் சேர்ந்த திலீப்(28) என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் பிரவீண் கட்டலோயா வீட்டுக்கு திலீப் வந்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நட்பு பாராட்டும் அளவுக்கு மாறியுள்ளது.
அப்போது கஸ்டம்ஸில் வெளிநாட்டிலிருந்து ஐபோன் கலெக்சன் வந்திருப்பதாகவும் அதனை வாங்கி தனியாக பிஸ்னஸ் செய்யலாம் என ராக்கி கட்டோலயாவிடம் திலீப் கூறியிருக்கிறார். மேலும் பாதி பணம் தான் ஏற்பாடு செய்வதாகவும் மீதிப் பணத்தை தாங்கள் தந்தால் இருவரும் சேர்ந்து பிசினஸ் செய்யலாம் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய பிரவீண் கட்டலோயாவின் மனைவி ராக்கி கட்டோலயா ரூபாய் 2,73,000 கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்த பிரவீன் கட்டலோயா மற்றும் அவரது மனைவியும் கேட்க, திலீப் நாள் கடத்தியுள்ளார். இந்த நிலையில் திலீப் தனது மொபைல் நம்பரை மாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால், பிரவீண் கட்டலோயா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த திலீப்பை, போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் ரூபாய் 2,73,000 ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டபோது இவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி புகார்கள் வந்திருப்பதும் தெரியவந்தது.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு ஜாம்பஜார் காவல் நிலையத்தில் தங்க நகைகள் திருடிய புகார் மற்றும் அமைந்தகரையில் படிக்கும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் இருப்பது தெரியவந்தது.வேப்பேரி போலீசார் ஜாம்பஜார் மற்றும் அமைந்தகரை காவல் நிலைய புகார்தாரர்கள் வேப்பேரி காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு திருவல்லிக்கேணியில் தங்கி ராயப்பேட்டையில் ஆடை நிறுவனம் வைத்திருக்கும் ரவீந்திரன் என்பவரின் அண்ணிக்கு முகநூல் மூலமாக திலீப் பழக்கமாகி உள்ளார். மேலும் இந்த பழக்கமானது வீடுவரை வந்து செல்லும் அளவிற்கு நட்பாக மாறியது. கடந்த 2017 ஆம் ஆண்டு திலீப் வீட்டுக்கு வரும்பொழுது ரவீந்திரனின் வீட்டிலிருந்த 30 சவரன் நகையை திருடியுள்ளார் என்பதும் இதனை அப்போதே ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இது மட்டுமல்லாது வேலை வாங்கித்தருவதாக கூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏர்ஹோஸ்டஸ் மாணவி பிரியாவிடம் ரூபாய் 2.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் இதுகுறித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைந்தகரை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித் இருப்பதாகவும் வேப்பேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திலீப்பிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏர்ஹோஸ்டஸ் படிக்கும் மாணவிகளிடம் மோசடி செய்வதற்காகவே தி.நகரிலுள்ள ஒரு தனியார் இன்ஸ்டிட்யூடில், திலீப் அந்த மாணவிகளுடன் சேர்ந்து படித்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் பிரியா என்ற மாணவியுடன் பழகி சென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண் வேலை ரெடி செய்துவிட்டதாகவும் கூறி ரூபாய் 2.50 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

மேலும் பிரியாவின் தோழிகளிடமும் மொபைல் நம்பரில் வாட்ஸ் அப் மூலமாக பிரியாவிற்கு வேலை வாங்கி கொடுத்தது போல உங்களுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் ஏமாற்றியுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இதேபோல வேலை வாங்கி தருவதாக கூறி சமூக வலைதளங்களின் மூலம் பழக்கமாகி பணம் பறித்த புகாரில் இவர் மாதவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஒவ்வொரு முறையும் ஏமாற்றி பணம் நகைகளை பறித்த பிறகு சிறிது காலம் தலைமறைவாகி, மீண்டும் மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது போன்று பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிகளை எல்லாம் திலீப் ஒப்புதல் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார். ஜாம்பஜார் மற்றும் அமைந்தகரை காவல் நிலையங்களில் புகார் கொடுத்தபோது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு திலீப்பை கைது செய்திருந்தால் இவர் மேற்கொண்டு யாரையும் ஏமாற்றி இருக்க மாட்டார்.
ஆனால் காவல் துறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாலேயே இவர் மீண்டும் மீண்டும் மோசடி செய்து செய்து வந்துள்ளார் என்கின்றனர் திலீப்பால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பலர் திலிப் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுக்காமல் உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை குறிவைத்து நட்பாக பேசி வீடு வரை சென்று பணம், நகைகளை மோசடி செய்த மோசடி மன்னன் திலீப்பை வேப்பேரி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button