சினிமா தொழிலாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்தம்..! : படப்பிடிப்பு பணிகள் பாதிக்குமா?
தமிழ் திரையுலகில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் தலைமை சங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் சமீப காலங்களாக தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் விரோதப் போக்கை கடைபுடிப்பதாகவும், படப்பிடிப்பு தளங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிய மும்பை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வெளிப்புற படப்பிடிப்பு கருவிகளை விநியோகம் செய்வதற்கு இரண்டு மும்பை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதுசம்பந்தமாக பெப்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது… தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருவதன் காரணமாக படப்பிடிப்புக்கு தேவையான கேமரா உள்ளிட்ட தளவாட பொருட்களும் புதிய வடிவமைப்புடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மும்பை நிறுவனமான லைட்ஸ் அண்ட் லைட்ஸ் நிறுவனம் புதிய தொழிற்நுட்ப வடிவிலான கருவிகளை படப்பிடிப்புக்கு வழங்க கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் படப்பிடிப்பு கருவிகளை கையாள அவர்கள் நிறுவனத்தின் பணியாளர்களையும் அனுப்புவதாக கூறினார்கள். பின்னர் பெப்சியில் இணைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து நமது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படாத வகையில், லைட்ஸ் அண்ட் லைட்ஸ் நிறுவனத்திடம் சம்மேளனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுபோன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாளும் விதமாக, நமது சிறிது காலத்திற்கு சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட டெக்னீசியன் யூனியன், லைட் மேன் யூனியன் உறுப்பினர்களுக்கு லைட்ஸ் அண்ட் லைட்ஸ் நிறுவனம் பயிற்சி வழங்கவேண்டும். தொழிலாளர்கள் பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் அவர்களுக்கு உணவு, பயணச்செலவுகளுக்கு குறிப்பிட்ட தொகையை லைட்ஸ் அண்ட் லைட்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். நமது உறுப்பினர்கள் அனைவரும் பயிற்சி பெற்றவுடன் நூறு சதவிகிதம் நமது உறுப்பினர்கள் மட்டுமே பணிபுரிவார்கள். பின்னர் அவர்களது உறுப்பினர்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை நமது உறுப்பினர்கள் என்பது சதவிகிதம் பேரும், அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருபது சதவிகிதம் பேரும் பணிபுரிவார்கள் என அனைத்து நிர்வாகிகளின் சம்மதத்துடன் பெப்சி ஒப்பந்தம் செய்துள்ளது என்றனர்.
இந்நிலையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் படப்பிடிப்பு கருவிகளை வழங்கி வரும் அவுட்டோர் யூனிட் சங்கத்தின் சார்பில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளனர். அந்தக் கடிதத்தில்.. புதிதாக தொட்ங்கப்பட்ட தமிழ்நாடு டெக்னீசியன் யூனியன் உறுப்பினர்கள் பணிபுரியும் படப்பிடிப்புக்கு மட்டுமே நாங்கள் தொழில் ஒத்துழைப்பு வழங்குவோம். பெப்சியில் இணைக்கப்பட்ட தென்னிந்திய டெக்னீசியன் யூனியன் உறுப்பினர்கள், தமிழ்நாடு டெக்னீசியன் யூனியன் உறுப்பினர்களை பணிபுரிய அனுமதிக்காத காரணத்தால் நாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது என தெரிவித்துள்ளனர்.
அவுட்டோர் யூனிட் சங்கத்தின் கடிதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவு கிடைக்கும் வரை தாங்கள் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
கடிதப் போக்குவரத்து ஒருபுறமிருக்க, டெக்னீசியன் யூனியன் நிர்வாகிகள் பேசுகையில்… லைட்ஸ் அண்ட் லைட்ஸ் போன்ற எந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் எங்கள் உறுப்பினர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பெரும்பாலான மாநிலங்களில் போக்கஸ் பில்லராக எங்களது உறுப்பினர்கள் தான் பணிபுரிகின்றனர். லைட்ஸ் அண்ட் லைட்ஸ் போன்ற நிறுவனங்களின் வருகையால், படப்பிடிப்பு தளங்களில் எங்களது உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும், தயாரிப்பாளர்களுக்கு செலவும் குறையும்.
அதாவது படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மொத்தமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். ஒளிப்பதிவாளர்கள் காலநிலை மாற்றத்திற்கேற்ப தேவைப்படும் கருவிகளை அவ்வப்போது பெற்றுக்கொண்டு படப்பிடிப்பை மேற்கொள்ளலாம். இதனால் பணமும், நேரமும் மிச்சமாகும். ஆனால் இங்குள்ள அவுட்டோர் யூனிட் நிர்வாகம் குறைவான பொருட்களையே வைத்துள்ளனர். பகல் நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து இரவு படப்பிடிப்பு தொடர வேண்டுமானால் இவர்களது இடத்திற்கு வந்து பொருட்களை பெற்றுக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் செல்ல வேண்டும். இதனால் பணவிரயமும், கால விரயமும்தான் ஏற்படும். அவர்களும் நவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்க தயாரானால் ஒளிப்பதிவாளர்கள் அவர்களை நாடப்போகிறார்கள்.
மேலும் சம்மேளனம் எடுத்த முடிவிற்கு மாறாக எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக தொழில் ஒத்துழைப்பு வழங்க மறுத்து, படப்பிடிப்பு கருவிகளை வழங்க மாட்டோம் என்பதெல்லாம் அவர்களுக்குத்தான் நஷ்டமே தவிர எங்களுக்கு ஒன்றுமில்லை. இவர்கள் மட்டும் அனைத்து மாநிலங்களிலும் யூனிட் ஆரம்பித்து படப்பிடிப்பு கருவிகளை வழங்கலாம், ஆனால் இங்கு வேறொரு நிறுவனம் வந்தால் இவர்களுக்கு கோபம் வருகிறது இது எந்த வகையில் நியாயம் என்பதை அவர்கள்தான் கூற வேண்டும் என்கிறார்கள்.
எது எப்படியோ, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தற்போதுதான் தமிழ் சினிமா வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. இந்த சமயத்தில் ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்கிற காழ்புணர்ச்சியை விட்டுவிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தொழிற்சங்க நிர்வாகிகள் தகுந்த முடிவெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
– சூரியன்