தமிழகம்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? -: வீடு தேடி வரும் ஸ்கேனிங் கும்பல்..

சேலம் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று பரிசோதித்து, கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற சம்பவத்தில் கர்ப்பிணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கே வந்து கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று பரிசோதித்து கூறும் சட்டவிரோத கும்பல் இதில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது மகள் 28 வயதான சரண்யா சரண்யாவின் கணவர், அரசுப் பள்ளி ஆசிரியரான அருள்; இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சரண்யா கர்ப்பமானார். நான்கு மாத கர்ப்பிணியான சரண்யா பொங்கல் பண்டிகைக்காக ஆத்தூரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றார்.

அப்போது மகளுக்கு பிறக்க போகும் குழந்தை என்ன குழந்தை என்று பார்க்க ஆசைப்பட்டுள்ளார் சரண்யாவின் தாய் பூங்கொடி. ஆனால் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் ,இது தொடர்பாக தனது தோழி அலமேலு என்பவரிடம் கூறி புலம்பியுள்ளார்.

அலமேலு தனது மருமகன் சின்னராசு மூலம் சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த செவிலியரான சிவபிருந்தாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். சிவபிருந்தாவை தொடர்பு கொண்ட பூங்கொடி தனது மகள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்கவேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூறியுள்ளார்.

அதன்படி, தனது இருசக்கர வாகனத்தில் கையில் சிறிய ஸ்கேனிங் மிஷினுடன் பூங்கொடி வீட்டிற்கே சென்றுள்ளார் சிவபிருந்தா. சரண்யாவை ஸ்கேன் செய்த சிவபிருந்தா, கருவில் உள்ள குழந்தை பெண் தான் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கருவைக் கலைக்கும் முடிவுக்கு வந்த பூங்கொடி, செவிலி சிவபிருந்தாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர்மூலமாக ஆத்தூரை சேர்ந்த போலிமருத்துவர் பூமணி என்பவர் தொடர்பு கிடைத்துள்ளது. பூமணியை தொடர்பு கொண்ட பூங்கொடி தனது மகள் சரண்யாவிற்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சரண்யா வீட்டிற்கு வந்த போலிமருத்துவர் பூமணி, எந்த மருத்துவ பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வீட்டில் வைத்தே கருக்கலைப்பு செய்துள்ளார்.

அதனால், சரண்யாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு அழைத்து சென்ற போதுதான், கருக்கலைப்பு முயற்சி அரசு மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

வழக்குப் பதிவு செய்த ஆத்தூர் போலீசார் சரண்யாவின் தாய் பூங்கொடி, அவரது தோழி அலமேலு, அவரின் மருமகன் சின்னராசு மற்றும் செவிலியர் சிவபிருந்தா ஆகியோரை கைது செய்தனர் மேலும் வழக்கில் தொடர்புடைய போலி மருத்துவர் பூமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

தொடர் விசாரணையில் சிவபிருந்தா ஏற்கனவே பணியாற்றிய தனியார் மருத்துவமனையிலும் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என அறியும் பரிசோதனைகளை சட்டவிரோதமாக செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதேபோல் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியின் மகள் ரேணுகாதேவி. இவர் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஜூலை மாதம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் போன் மூலமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் ஆகஸ்ட் மாதம் இருவரும் திருப்பூருக்கு சென்று கலப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையறிந்த மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். ஆனால் மாணவி அவர் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மகள் ரேணுகாதேவி அவரது கணவர் கணேசனை சிறுவாச்சூர் அழைத்து வந்த பெற்றோர் சில நாளில் ஜாதகம் சரியில்லை என இருவரையும் பிரித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கணேசன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் இருவரையும் மீட்டு சென்று ராமநாதபுரத்தில் விட்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தந்தை சுப்பிரமணிக்கு உடல்நிலை சரியில்லையென தாய் செல்வி, மகள் ரேணுகாதேவியிடம் கூறியுள்ளார். அவர் கடந்த 21 – ம் தேதி கணவரிடம் சொல்லாமல் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த ரேணுகா தேவியை ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இந்த தகவலை தனது கணவரிடம் தெரிவித்ததோடு, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கணிகர் அவர்களிடம் ரேனுகாதேவி புகார் கூறியுள்ளார். புகாரின் பேரில் ஆத்தூர் டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையிலான போலீஸார் ரேணுகா தேவியை மீட்டு ஓமலூர் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தந்தை சுப்ரமணி, தாய் செல்வி ஆகியோரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில், வீட்டிற்கே சென்று கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சட்டவிரோதக் கும்பலை போலீசார் பிடிப்பார்களா? எத்தனைக் கருக்கலைப்புகள் நடந்தன என்பது வெளிச்சத்திற்கு வருமா?

ரபீக் அகமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button