கிராமத்து மக்களின் வாழ்வியலைச் சொல்கிறதா ? “அழகிய கண்ணே” திரைப்படம் !
எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிப்பில், ஆர். விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ள படம் “அழகிய கண்ணே”. இப்படத்தில் விஜய் சேதுபதி, பிரபு சாலமன் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கதைப்படி…. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் வசிக்கும் லியோ சிவக்குமார் சினிமா இயக்குனராகும் கனவோடு புரட்சி நாடகங்கள் நடத்திக்கொண்டு நண்பர்களோடு சுற்றித் திரிகிறார். அப்போது இவரது வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிக்கும் சஞ்சிதா ஷெட்டி மீது காதல் கொள்கிறார். இருவரும் ஆங்காங்கே சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்.
அந்த சமயத்தில் சென்னையில் உள்ள இயக்குனர் பிரபு சாலமன் அலுவலகத்திலிருந்து உதவி இயக்குனராக சேர்வதற்கு லியோ சிவக்குமாருக்கு அழைப்பு வர, சென்னை செல்கிறார். பின்னர் நாயகி சஞ்சிதா ஷெட்டிக்கும் வேலை கிடைக்க இருவரும் சென்னையில் வசிக்கின்றனர். அதன்பிறகு இருவரும் தங்கள் காதலை குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தி, மிகுந்த எதிர்புகளுக்கிடையில் திருமணம் செய்துகொண்டு வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறக்கிறது.
லியோ சிவக்குமார் இயக்குனராக வேண்டும் என தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சஞ்சிதா வெட்டியும் குடும்ப சூழல் காரணமாக அலுவலகம் செல்ல நேரிடுகிறது. இந்நிலையில் குழந்தையை அருகிலிருந்து பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தையை பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு இருவரும் பணிகளைக் கவணிக்கச் செல்லும் போது, குழந்தையை பிரிய மனமில்லாமல் எதிர்கால கணவுகள், ஏக்கங்களுடன் செல்கிறார்கள்.
சஞ்சிதா ஷெட்டியின் ஆசைகளும், கணவுகளும் நிறைவேறியதா ? லியோ சிவக்குமார் இயக்குனராக ஜெயித்தாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை….
படத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதாஷெட்டி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர். லியோ சிவக்குமாருக்கு இது முதல் படம் என்பதால் சில இடங்களில் நடிக்க முயன்றிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் பாடல், சண்டைக் காட்சிகளில் அவரது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நகர்புறங்களில் வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி இருவரும் குழந்தையைப் பராமரிக்க முடியாமல் தவிப்பதை, இயக்குனர் சொல்லியிருப்பது சிறப்பு. கிராமத்து மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக பிரதிபலிக்கும் காட்சிகளும் சிறப்பு. மற்றபடி அடுத்து என்ன என்பதை சமானியனும் அறிந்துகொள்ளும் விதத்தில் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
லியோ சிவக்குமார் இனிமேலாவது நல்ல கதையைத் தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.