தமிழகம்

கொடைக்கானலுக்கு உருவான புதிய பாதை

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு செல்ல தற்போது இரண்டு பாதைகளே பிரதானமாக உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக, காட்ரோடு, ஊத்து, பாதைதான் மிக முக்கியமான பாதை. அடுத்தபடியாக பழனி வழியாக பெருமாள் மலையை அடைந்து வரலாம்.

இது தவிர இன்னொரு பாதையாக வத்தலக்குண்டுவில் இருந்து பட்டிவீரன்பட்டி, பண்ணைக்காடு வழியாக மெயின் பாதையை அடைந்து செல்லலாம். இந்த பாதை மிகவும் சுற்றிச்செல்லும் பாதையாகும். தற்போதைய நிலையில் கொடைக்கானல் செல்ல வத்தலகுண்டு காட்ரோடு பாதை மட்டுமே சிறந்ததாக உள்ளது.

இந்த சூழலில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி மற்றும் அடுக்கம் கிராமம் வழியாக பாதை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. பல்லாண்டுக்கு பின் பணிகள் 80 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்று பாதை பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டம் வழியாக கொடைக்கானல் செல்பவர்கள் இந்த அடுக்கம் பாதை வழியாக சென்றால் 25 கிலோமீட்டர் மிச்சமாகும். பெரியகுளத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கொடைக்கானலை அடைய முடியும்.

80 சதவீதம் பணிகள் நிறைவு எனினும் இந்த பாதையில் செல்ல வனத்துறை அனுமதி தேவை. 80 சதவீதமே பணிகள் நிறைவு அடைந்துள்ளதால் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இடையில் இரண்டு மூன்று இடங்களில் பாலங்கள் வேலை நடைபெறுகிறது. பாலங்கள் வேலை முடிந்ததும் போக்குவரத்துக்கு முழுமையாக திறக்கப்படும் என கூறப்படுகிறது.

அடுக்கம் பாதை உருவான கதையை இப்போது பார்ப்போம். கடந்த 1985 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பெரியகுளம் தொகுதியை மையம் வைத்து கொடைக்கானலுக்கு குறைந்த நேரத்தில் சென்றுவர மலைப்பகுதியில் குறிப்பாக வனப்பகுதியில் சர்வே செய்து பாதை அமைக்க உத்தரவிட்டார். ஆனால் அதன்பின் பணிகள் கிடப்பில் இருந்தது. 2006ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைந்தது இதன் காரணமாக பெரியகுளத்தில் நடந்தது அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் பாதை பணிகள் தடைப்பட்டது.


கடந்த 2011-&12 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பணியினை மீண்டும் துவக்க கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா இதற்காக கூடுதலாக 21 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். அதன் பின்னர் பணிகள் தொடங்கியது.

இதற்கிடையே வனத்துறை போட்ட முட்டுக்கட்டை காரணமாக பணிகள் மீண்டும் தொய்வடைந்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் பணிகள் வேகமெடுத்தது. அடுக்கம் வரை பாதை நிறைவு பெற்ற போதிலும் சில கிலோமீட்டர் தூரம் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. இதுபற்றி அந்த பகுதியினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அடுக்கம் பாதை குறித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் முழு வீச்சில் நடந்தது. இதனால் தற்போது பணிகள் 80% நிறைவு பெற்றுள்ளது.தற்போது நடைபெற்று வரும் பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும். என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிறிய ரக வாகனங்கள் இச்சாலை வழியே பெரியகுளத்தில் இருந்தும் கொடைக்கானலில் இருந்தும் சென்று வருகின்றன.

இந்த பாதையை இப்போதே தேனி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் மட்டுமே ஆகிறது. இந்த பாதையின் முழு பணிகள் நிறைவு பெற்று பேருந்துகள் இயக்க வேண்டும் என்று அடுக்கம் கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து அடுக்கு மலை கிராம விவசாயிகள் கூறுகையில், “அடுக்கத்தில் இருந்து கும்பக்கரை சாலையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் சாலை அமைப்பதில் பல ஆண்டுகளாக இழுபறி நீடித்தது. அடுத்தடுத்து பணிகள் நடைபெற்றாலும் இயற்கை சீற்றங்களால் அதிக சேதம் ஏற்பட்டு கொண்டிருந்தது. தற்போது போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் பல தலைமுறைகளாக எங்கள் கிராமத்திற்கு இருந்து வந்த போக்குவரத்து பிரச்சனை தீர்வு ஏற்பட்டுள்ளது” என்றனர். சாலைப் பணிகள் முடியும் நிலையில் இருப்பினும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும் வகையில் இந்த வழித்தடம் இல்லை. கொடைக்கானல் செல்வதற்கான மாற்றுப் பாதை யாவும் ஒரு வழிப் பாதை யாவும் பயன்படுத்திக் கொள்ளும் நிலையிலேயே அமைந்துள்ளது.

மேலும் தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான கும்பக்கரை அடுக்கம் சாலைப் பயன்பாட்டிற்கு வருவதால் அடுக்கம் பெருமாள் மலை வழியாக கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை உருவாகும் தேனி மாவட்ட மக்கள் தற்போது வத்தலகுண்டு காட்ரோடு வழியாக கொடைக்கானல் சுற்றி செல்லும் நிலை மாறும் இதனால் 25 கிலோ மீட்டர் பயணம் தூரம் குறையும்.

-A.முகமது ஆரிப்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button