அதிமுகவை வழிநடத்த இருப்பவர் சசிகலாதான்… : உற்சாகத்தில் அதிமுக, அமமுகவினர்
சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலையாகி வந்தவுடன் மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினரும் அமமுகவினரும் இருக்கும் நிலையில் ஒரு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி திமுகவை வீழ்த்த சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வது அவசியம் என்று பேசினார். அதனால் சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜகதான் காய்நகர்த்துகிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் குருமூர்த்தி என்கிறார்கள் அதிமுகவினர்.
குருமூர்த்தி விழாவில் பேசியது சம்பந்தமாக சந்திராசாமியுடன் நெருங்கிப் பழகியவரும் அதிமுகவின் தீவிர விசுவாசியுமான விவேக்குமார் நம்மிடம் கூறுகையில், “குருமூர்த்தி வாய்தவறி பேசிவிட்டதாகவே கருதுகிறேன். சசிகலா கங்கை நீருக்கு இணையானவர். கங்கை நீருக்கு இணையான சசிகலாவோடு சாக்கடை நீரும் (அவர் மனதில் நினைத்தவர்கள்) சேர்ந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று கூறுவதற்கு பதிலாக வாய்தவறி பேசிவிட்டார்.
சேற்றில் முளைத்த செந்தாமரை போல் தனக்கு ஏற்பட்ட துயரங்களையும், வலிகளையும் சுமந்து கொண்டு தமிழகத்தில் எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு ஜெயலலிதாவையும், அதன்பிறகு பன்னீர் செல்வமும், பழனிச்சாமியும் முதல்வராக காரணமாக இருந்தவர் சசிகலா. அதேபோல் நரசிம்மராவ், சந்திரசேகர், குஜ்ரால், தேவகவுடா ஆகிய நான்கு பேர் பிரதமராக காரணமாக இருந்தவர் சந்திராசாமி என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களை சாக்கடை என்று குருமூர்த்தி பொதுநிகழ்ச்சியில் பேசியது அநாகரீகத்தின் உச்சம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் பொதுச்செயலாளராக சிறைசென்றவர் மீண்டும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அதிமுகவின் பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்த இருப்பவர் சசிகலாதான் என்பதும் அதிமுகவினருக்குத் தெரிந்த விஷயம்.
இதற்கிடையில் அவர் இல்லாத போது நிர்வாகிகள் சிலர் தான்தோன்றித்தனமாக பேசினாலும், சசிகலா வந்ததும் மீண்டும் அவரிடம் சரணடைந்து அவர் தலைமையில் தேர்தலை சந்தித்தால் தான் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் அவர் தலைமையை ஏற்க தயாராவார்கள். இந்நிலையில் சசிகலாவை சேர்த்து தேர்தலை சந்தித்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று கூறி சசிகலாவை நான்தான் அதிமுகவில் இணைக்க காரணமாக இருந்தேன் என்று விளம்பரம் தேடிக்கொள்ளவே குருமூர்த்தி இவ்வாறு பேசியிருக்கிறார்” என்றார்.
இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அமமுக ஒன்றியச் செயலாளர் பொதுவக்குடி செந்தில்குமார் நம்மிடம் கூறுகையில், “பழனிச்சாமி, பன்னீர் செல்வம் தலைமையிலான தற்போதைய அதிமுக தேர்தலைச் சந்தித்தால் திமுகவை வெற்றி கொள்ள முடியாது. ஏனெனில் இவர்கள் இருவருக்கும் தலைமைக்கான ஆளுமையோ மக்கள் செல்வாக்கோ இல்லை. இந்தச் சூழலில் சசிகலா ஒருவர்தான் கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் மக்களிடையேயும் அறியப்பட்ட தலைமைப் பண்பு மிக்க தலைவராக இருக்கிறார். ஆகவே அதிமுகவின் முகமாக சசிகலாவை முன்னிறுத்தி, தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே திமுகவிற்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்க முடியும். சசிகலா, தினகரன் தலைமையிலான அதிமுகவிற்கு முக்குலத்தோர் வாக்குகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும் என்பதே உண்மை. ஆகையால் சசிகலா தினகரன் தலைமையில் 2021 தேர்தலை சந்தித்தால் மட்டுமே திமுகவை வீழ்த்தி அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முடியும்” என்றார்.
இதுகுறித்து ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த திரு. சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.
அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் திரு. குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல !
துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது -என்று டிவிட்டரில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் ஜனவரி 27 ஆம் தேதி பிரமாண்டமான வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள் வரவேற்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதிமுகவின் திருப்புமுனையாக ஜனவரி 27 அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறார்கள்.
காத்திருப்போம் நாமும்…
– சூரிகா