குழந்தை “டாடா” என்றதும், தந்தையின் ஆனந்தமே தனி சுகம் தானே…! “டாடா” படத்தின் திரைவிமர்சனம்
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், கவின், அபர்ணா தாஸ் நடிப்பில், கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டாடா”.
கதைப்படி… பெற்றோர் பேச்சைக் கேட்காமல், படிப்பிலும் கவனம் செலுத்தாமல், பொறுப்பற்ற கல்லூரி மாணவன் மணிகண்டன் ( கவின் ), தனது வகுப்புத் தோழி சிந்து ( அபர்ணா தாஸ் ) இருவரும் காதலிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக சிந்து கர்பமாகிறார். மணிகண்டன் கர்ப்பத்தை கலைக்கச் சொல்கிறார், சிந்து மறுக்கிறார். இவர்கள் விவகாரம் இருவர் வீட்டிற்கும் தெரியவர பிரச்சினை பெரிதாகிறது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு நண்பனின் வீட்டில் தங்குகிறார்கள்.
அதன்பிறகு நண்பனின் உதவியால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறார் மணிகண்டன். இரவு வீடு திரும்பும் போது குடித்துவிட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் மனைவியின் பேச்சைக் கேட்காமல் தினசரி குடித்துவிட்டு வருவதால் சண்டையிடுகிறாள் சிந்து. ஒருகட்டத்தில் சண்டை பெரிதாகி இனிமேல் குடிக்க மாட்டேன் என வயிற்றில் இருக்கும் குழந்தை மீது சத்தியம் செய்யச் சொல்கிறார் சிந்து. ஆனால் மணிகண்டன் திருந்தாததால், நான் செத்தால் தான் திருந்துவியா ? எனக் கேட்டு கத்துகிறாள், நீ செத்துத்தொல அப்பதான் நான் நிம்மதியாக இருப்பேன் என கத்திவிட்டு வேலைக்குச் செல்கிறார் மணிகண்டன்.
திடீரென பிரசவவலி ஏற்பட்டவுடன் சிந்து மணிகண்டனுக்கு போண் செய்கிறார், அதனைப் பொருட்படுத்தாமல் சுவிட்ச் ஆப் செய்துவிடுகிறார். பக்கத்து வீட்டுப் பெண் உதவியிடன் தனது தந்தைக்கு போண் செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறாள் சிந்து. பின்னர் மணிகண்டனுக்குத் தெரிந்து மருத்துவ மனைக்குச் சென்று பார்க்கும் போது, குழந்தை மட்டும் இருக்கிறது. சிந்துவை காணவில்லை.
அதன்பிறகு மனைவி சிந்து மீது கோபமடைந்து, தனது தாயிடம் சென்று நிற்கிறார். அவர்கள் ஏற்காததால் அனாதை ஆசிரமத்தில் குழந்தையை சேர்க்கிறார். பின்னர் மனம் கேட்காமல் இவரே வளர்க்கிறார். குழந்தை வளர வளர ஊரியாக இருந்த மணிகண்டன் பொறுப்புள்ள தந்தையாக மாறுகிறார். இனிமேல் தனது மகனை மனைவி சிந்து விடம் காண்பிக்க கூடாது என முடிவு செய்து, அம்மா ஞாபகம் வராமல் வளர்க்கிறார்.
நான்கு வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாக மனைவி சிந்துவை சந்திக்கிறார். மனைவியை மன்னித்தாரா மணிகண்டன் ? சிந்து குழந்தையை பிரிந்தது ஏன் ? என்பது மீதிக்கதை….
இன்றைய காலகட்டத்தில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளசுகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு, அருமையாக திரைக்கதை அமைத்து, அற்புதமான வசனங்களுடன் இயக்கிய இயக்குனர் கணேஷ் கே. பாபுவை பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோல் படத்தின் முதல்பாதியில் பார்வையாளர்களின் மனங்களில் வெறுப்பு, இரண்டாம் பாதியில் பாராட்டு என மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கவின். இவருக்கு இணையாக அபர்ணா தாஸும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
கவினின் தாய், தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார்கள் பாக்கியராஜும், ஐஸ்வர்யாவும். மகன் மீது பாசம் இருந்தாலும் கணவர் பேச்சை மீற முடியாத மனைவியாக அனைவருக்கும் தங்களது தாயை நினைவுபடுத்துகிறார் ஐஸ்வர்யா. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் கணவன், மனைவி, தந்தை, மகன் உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்திய படம் “டாடா” என்றே சொல்லலாம்.