“எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் சிலையை பராமரிப்பது அவசியம்” : மதுரை ஐகோர்ட்டு
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்துடன் அமைந்துள்ளது. திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் சுற்றுலாத்துறை படகு போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளது.
கடலின் உப்புக்காற்று சிலையின் மீது வீசுவதால் சிலையை பாதுகாக்க 4 வருடத்திற்கு ஒருமுறை வேதியியல் பொருட்கள் பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் கடந்த 5 வருடங்களாக திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படாமல் உள்ளது. அவ்வப்போது திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகளுக்காக தமிழக அரசு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை எவ்வித பராமரிப்பு பணிகளும் தொடங்கப்படவில்லை. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகிய இடங்களுக்கு படகில் செல்ல ஒரு நபருக்கு ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டும் தான் பயணிகளை கொண்டு செல்கிறார்கள். ஆனால் அதே தொகை தான் வசூலிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகளை தொடங்கவும், அங்கு படகுகள் செல்லவும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்க வேண்டும் அல்லது காந்தி மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கு பாலம் அமைப்பது குறித்தும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோரிக்கை மனு அனுப்பினேன். எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவர் புகழை நிலைநாட்டுவது அவசியம். அவரது சிலையை பராமரிக்க அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.