11 ஆண்டுகளாக சுத்தமான இலவச குடிநீர்..! கிராம மக்கள் அசத்தல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிராம மக்களே நிதி வசூலித்து மினரல் வாட்டர் பிளான்ட் அமைப்பை ஏற்படுத்தி கடந்த 11 ஆண்டுகளாக சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கல்லமநாயக்கன்பட்டி கிராமம் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள மண் தரையை கொண்டதாகும். இதனால் கல்லமநாயக்கன்பட்டி கிராம மக்களில் பெரும்பாலானோருக்கு கால்சியம் மிகுதியால் கல்லடைப்பு, சிறுநீர் பாதிப்பு போன்ற நோய்கள் அதிகம் ஏற்பட்டு வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், கடந்த 2007ஆம் ஆண்டு மினரல் வாட்டர் பிளான்ட் அமைப்பை ஏற்படுத்துவதற்கு தேவைப்படும் நிதியை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தலா ஆயிரத்து 500 ரூபாய் விதம் வீடுதோறும் கிராம மக்களே வசூலித்து நிதி திரட்டினர். இந்த நிதியில் கிடைத்த பணத்தைக் கொண்டு, மினரல் வாட்டர் பிளான்ட் அமைப்பை கிராம மக்கள் ஏற்படுத்தினர்.
கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் ஏற்படுத்தியுள்ள மினரல் வாட்டர் பிளான்ட் கடந்த 11 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை பராமரிப்பதற்கு மட்டும், வீடுதோறும் மாதத்துக்கு தலா முப்பது ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. இதைக் கொண்டு வீட்டுக்கு வழங்கப்பட்ட அட்டையும் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இதை தவிர வேறு கட்டணம் எதுவும் பெறப்படுவதில்லை. இதே போன்று மற்ற கிராமத்தினரும் தங்களுக்கான சுத்தமான நீரை பெற்றுக் கொள்ள தாங்களாகவே களம் இறங்கலாம்.