பல்லடத்தில் தொடர் விபத்துக்களுக்கு யார் காரணம்..?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் அமைந்துள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழிப்பயணம் பாதுகாப்பானதா? என பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருப்பூர் கோவை மாவட்ட எல்லையான காரணம்பேட்டையில் இருந்து மாதாப்பூர் வரை சுமார் 13 கிலோமீட்டர் சாலையில் தான் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புக்களும், படுகாயமும் அடைகின்றனர்.
மேலும் சாலையை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதிலும், வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்த வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுவாக திருமணம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெருக்கடியும் விபத்துக்களும் அதிக அளவு நடைபெறுகிறது. மேலும் மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்கின்றனர். மேலும் அரசு பேருந்துக்களின் அசுர வேகம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு செல்வதால் பல்லடம் சாலை பந்தைய சாலையாக காட்சி அளிக்கிறது.
மேலும் இப்பகுதியில் வேகத்தடை அடையாளமாக வெற்று பதாகைகள் மட்டுமே காட்சி அளிக்கிறது. எனவே பல்லடத்தில் விப்த்துக்களை கட்டுபடுத்த போக்குவரத்து காவல்துறை அதிக அளவில் விதிகளை மீறி அதிவேகத்துடன் இயங்கும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுத்தால் மட்டுமே விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
பெரும்பாலும் விபத்திற்கு காரணம் போதிய அனுபவமில்லாத ஓட்டுனர்களால் நடைபெறுவதால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் முன்னெச்சரிக்கையாக வாகனத்தை இயக்கினால் விபத்தை தவிர்க்கலாம்.