பல்லடத்தில் கணவனை குத்திக்கொன்ற மனைவிக்கு குண்டாஸ்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டிய கணவனை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்லடம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் கொலை குறித்த பின்னனியில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கோபாலன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுசீலா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கோபாலன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பல்லடத்தை அடுத்த செந்தூரான் காலனியில் குடியேறினர். மேலும் கோபால் சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்திலும், சுசீலா அருள்புரத்தில் உள்ள நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுசீலா வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிஸ் மேலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சுசிலாவிற்க்கும் மாரீஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. காதல் கண்ணை மறைக்க சுசீலாவை திருமணம் செய்துகொள்ள மாரிஸ் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுசீலா மறுப்பு தெரிவித்ததோடு, கணவர் உயிரோடு இருக்கும் போது வீட்டார் சம்மதிக்கமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் கணவர் கோபாலை கொன்றுவிட்டால் மாரீசை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை அடுத்து அதே நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் கரூரை சேர்ந்த அன்புச்செல்வத்திடம் இது குறித்து பேசியுள்ளார். அதற்கு தனக்கு தெரிந்த கூலிப்படையை ஏற்ப்பாடு செய்து தருவதாக கூறி கரூரை சேர்ந்த கிடா வினோத், லோகேஸ்வரன் மற்றும் விஜய் ஆகியோரை மாரிசுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் கூலிப்படையினருக்கு கொலை செய்ய ரூபாய் 6 லட்சம் பேசி முடிக்கப்பட்டு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுசீலாவின் கணவரை கொலை செய்ய கடந்த மே மாதம் 4 ஆம் தேதி நாள் குறித்துள்ளனர். இந்நிலையில் சுசீலா தனது கணவரை தந்திரமாக செல்போனில் அழைத்து குழந்தைகளின் பிறந்த நாளுக்கு புதுத்துணி வாங்க வேண்டும் என கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனை அடுத்து கணவர் நிறுவனத்தில் இருந்து கிளம்பிவிட்ட தகவலை மாரீசுக்கு தெரிவித்துள்ளார். இதனை கூலிப்படையை சேர்ந்த கிடா வினோத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கோபாலை அடையாளம் காட்ட தன்னுடன் வேலைபார்க்கும் மணிகண்டன் மற்றும் மதன்குமாரை உடன் அனுப்பியுள்ளார். சின்னக்கரை அருகே உள்ள் ஜூஸ் கடைக்கு அருகே நின்றிருந்த கோபாலை கூலிப்படையினருக்கு அடையாளம் காட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். பின்னர் கோபால் அருகே சென்ற கிடா வினோத் லோகேஸ்வரன் மற்றும் விஜய் ஆகிய மூவரும் பேச்சுகொடுத்துக்கொண்டே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சராமாரியாக கோபாலை குத்திக்கொன்றுவிட்டு தாங்கள் வந்த பைக்கில் சாவகாசமாக தப்பிச்சென்றுள்ளனர்.
பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள சாலையில் நடந்த கொடூர கொலைச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் கொலையுண்ட கோபாலின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மனைவி சுசீலாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது தனது கணவரின் உடலை பார்த்து சுசீலா கதறி அழுத நடிப்பு காண்போரின் கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

சவால் நிறைந்த கொலை வழக்கில் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனின் முதற்கட்ட விசாரணையில் சுசீலாவின் செல்போனிற்கு வந்த அழைப்புக்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. கொலை நடப்பதற்கு முன்பு கணவருக்கும் மாரீசுக்கும் பேசியிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மாரீசின் நண்பர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மாரீஸ் கூலிப்படையை வைத்து கோபாலை கொலை செய்ததும் இதற்கு சுசீலாவும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து கொலை வழக்கில் தொடருடைய கள்ளக்காதலன் மாரீஸ், கிடா வினோத், லோகேஸ்வரன், விஜய், மணிகண்டன், மதன்குமார், மனைவி சுசீலா ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கொடூர கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பருந்துரையின் பேரில் ஆட்சியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கட்டிய கணவன் என்று கூட பாராமல் கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த மனைவி சுசீலா திருப்பூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
– நமது நிருபர்