எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்… அடங்கிய ஆளுநர்..!
அமைச்சரவையில் யாரையும் நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. என்னுடைய பரிந்துரையை மீறி அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது அமலாக்கத்துறை வழக்கைச் சந்தித்து வரும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக கடந்த வாரம் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. செய்திக்குறிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தனது முந்தைய முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் தெரிவித்தார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை கேட்பதே சரியாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆகவே அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நான் கேட்க இருக்கிறேன். என்னிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்என்ரவி கூறியிருந்தார்.
ஆளுநர் ஆர் என் ரவிக்கு பதில் கொடுக்கும் விதமாக ஆறுபக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். முதலாவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட இரண்டு கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனை கோரப்படவில்லை. இரண்டாவதாக முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பதற்காக அதை திரும்பப் பெற்றீர்கள். இதுபோன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்டரீதியான கருத்தைக் கேட்க வில்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சரின் தலையீடு உங்களை வழிநடத்தியது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்தி அவசரப்பட்டு இச்செயலை செய்தீர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கையாளும் போது ஆளுநர் போன்ற அரசமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். மேலும் ஆதாரமற்ற அச்சுறுத்தல்களைக் கொடுத்து அரசமைப்புச் சட்டத்தை மீற வேண்டாம். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப உங்களிடம் இனிமையாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டிருக்கிறோம். அதற்காக அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான உங்கள் உத்தரவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும் என அவசியம் இல்லை என கடிதம் வாயிலாக முதலமைச்சர் கூறியுள்ளார். என்னுடைய அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மட்டுமே உரித்தான தனி உரிமை என்னுடைய ஆலோசனையின்றி அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக என்னுடைய அமைச்சரை பதவி நீக்கம் செய்த உங்கள் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆளுநரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என ஆளுநருக்கு எதிரான கோபக்குரல்கள் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். தொழில்துறை அமைச்சர் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேசுகையில் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு நடைபெற்ற போது அவர் முதலமைச்சராக பதவியில் தொடர்ந்தார். ஆனால் செந்தில்பாலாஜியை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்கட்சியினரும், ஆளுநரும் துடியாய் துடிப்பது எதற்காக என்று தெரியவில்லை என பேசினார்.
இந்நிலையில் ஆளுநர் தனது முடிவிலிருந்து பின்வாங்கியதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அவரது நீக்க நடவடிக்கை சட்டரீதியாக அவரது பதவிக்கே ஆபத்தாக மாறலாம் என டெல்லியிலிருந்து சில தகவல்கள் சொல்லியிருக்கிறார்கள். மத்திய உளவுத்துறை மூலமாக உள்துறை அமைச்சகத்துக்கு அனைத்து தகவல்களும் சென்றிருக்கிறது. உடனடியாக சட்டரீதியாக ஒப்புதல் வாங்கியிருக்கிறீர்களா அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என ஆளுநரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். வாய்மொழியாக அனைத்து தகவல்களையும் கேட்டுப் பெற்றுள்ளதாக ஆளுநர் பதிலளித்துள்ளார்.
எவ்வளவு சீரியசான விஷயத்தில் அட்டர்னி ஜெனரலிடம் சட்டரீதியான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக வாங்கிய பிறகு அடுத்தகட்ட வேலைகளை பாருங்கள் என உள்துறை அமைச்சர் ஆர்.என்.ரவிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதன்பிறகு ஆர்.என்.ரவி தனது அறிவிப்பை திரும்பப் பெற்றிருக்கிறார் என்கிறார்கள்.
– சூரிகா