இந்தியா

பொது சிவில் சட்டம் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்..?

இந்தியாவில் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம், உரிமையியல் சட்டம் என அரசியலமைப்பு சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களும் அனைவருக்கும் பொதுவான சட்டங்கள். உரிமையியல் சட்டங்கள் (சிவில் சட்டம்) இந்தியாவில் உள்ள ஜாதி, மதம், பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு சமூகத்தினர் வசித்து வருவதால் அவர்களின் திருமணம், வாரிசு, சொத்துரிமை, குழந்தைகள் தத்தெடுப்பு, விவாகரத்து போன்ற பல்வேறு விஷயங்களில் தங்களுடைய பண்பாடுகளுக்கு ஏற்றவாறு சில நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் போலவே உரிமையியல் சட்டமும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் பொதுவான சட்டமாக இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் அங்கு சென்ற பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பேசுகையில்..நாட்டில் சில குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் திருப்திப்படுத்தக் கூடிய அளவில் ஒரு அரசியல் நடந்து வருகிறது. இது நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்தும். ஆகையால் அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி அனைவருக்கும் சமமான சட்டத்தை வழங்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டமே தெரிவிக்கிறது என மோடி பேசியுள்ளார். பாரதப்பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என பேசியது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில் கொள்கைகளால் வழிநடத்தக் கூடிய அரசாங்கம் பொதுசிவில் சட்டத்தை மக்கள் மீது திணக்க முடியாது. அது மக்களிடையே மேலும் பிரிவினையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மோடிக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் மோடி பேசுகையில், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என மோடியின் பேச்சிற்கு, குடும்பமும், நாடும் ஒன்றா? குடும்பம் என்பது இரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. அதேபோல் தேசம் அரசியல் ஆவணமாக அரசியல் அமைப்புச் சட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் வேற்றுமைகள் நிலவும், நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் வேற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைத் தான் அங்கீகரிக்கிறது. பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை. கடைசி சட்ட ஆணையத்தின் அறிக்கையை மோடி வாசிக்க வேண்டும் என மோடிக்கு தனது அழுத்தமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் சிதம்பரம்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இது சம்பந்தமாக பேசுகையில்.. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பயந்துதான் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் மதப்பிரச்சனையை அதிகரித்து, குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என மோடி நினைத்துள்ளார். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள் என ஸ்டாலின் பேசியுள்ளார். அவரைத் தொடர்ந்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது.. பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கோவிலுக்குள் சென்று பூஜை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதனால் பொது சிவில் சட்டத்தை இந்து மதத்திற்குள் முதலில் அமல்படுத்துங்கள் என அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் என்றது எதிர்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. இதனால் தான் பொது சிவில் சட்டத்தை வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக இந்தச் சட்டத்தை கையிலெடுத்துள்ளது என விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதேபோல் வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் பொது சிவில் சட்டம் வேண்டாம் என ஆவேசப்படுகிறார்கள் என பாஜகவினர் குற்றம் சுமத்துகிறார்கள்.

பொது சிவில் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமூகம் தான். நம்முடைய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பன்முகத்தன்மை கொண்டதாக மொழி, இனம், கலாச்சாரம், பாண்டுபாடுகளால் வேறுபட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் எப்படி சாத்தியாமாகும் என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். பொதுவாக இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையாக பின்பற்றும் முஸ்லீம் தனிநபர் சட்டம் 1937ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைப் பின்பற்றி வருகிறார்கள். இஸ்லாமிய தனிநபர், இஸ்லாமிய குடும்பத்தினரின் அக்கறை, இஸ்லாமிய சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வஃக்பு தொண்டு நிறுவனங்களைக் கையாளுதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற அனைத்துக்கும் அனைவருக்குமான சட்டத்தையே இஸ்லாமியர்களும் பின்பற்றுகின்றனர்.

இந்நிலையில் தான் அனைத்தையும் மாற்ற வேண்டும். அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இதன் பின்னணியில் அவர்களின் அரசியல் கணக்குகளும் இருக்கிறது என்கிறார்கள் எதிர்கட்சியினர். கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை நீக்கியது. தேர்தலுக்கு முன்பாக அயோத்தியில் ராமர் கோவிலை திறப்பதற்கு தீவிரமாகி வருகிறார்கள். அதோடு பொது சிவில் சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் இலக்கு, அதை விரைவில் கொண்டு வருவதற்கான வேலையும் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

இதற்கு தடையாக பல சம்பவங்களும் நடந்து வருகிறது. எதிர்கட்சிகள் இதுவரை இல்லாதளவு பாட்னாவில் கூட்டம் நடத்தியது. இரண்டு மாத காலமாக மணிப்பூர் கலவரம் நடந்து வருவது, மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் வாய் திறக்காத நிலையில், அங்கு சென்ற ராகுல்காந்தியை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது, கர்நாடகாவில் பாஜக தோல்வியை சந்தித்தள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நான்கு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வேண்டும். இங்கு தோல்வியைச் சந்தித்தால் 2024 தேர்தலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என பாஜகவினர் நினைக்கின்றனர்.

மேலும் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை அதிகாரத்தைப் பயன்படுத்தி சீர்குலைத்து வெற்றி பெற நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி என்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button