‘டாக்டர்’ பட்டம் பெற்ற எடப்பாடி பழனிசாமி
ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் ஏதேனும் ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தபின் `டாக்டர்’ பட்டம் வழங்கப்படும். நீங்கள் முனைவர் பட்டம் பெற விரும்பினால் இதுதான் நடைமுறை. ஆனால், கௌவுரவ டாக்டர் பட்டம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டத்தை பல்கலைக்கழகங்கள் வழங்கும். துறைசார்ந்து பணியாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இவை வழங்கப்படுகின்றன. சினிமா, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட துறையைச்சேர்ந்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், கருணாநிதி,விஜயகாந்த் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். துணைமுதல்வராக இருக்கும்போது, ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதேபோல நடிகர்கள் விஜய், விஜயகுமார் உள்ளிட்டோருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டாக்டர் எம் ஜி ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இருபத்தி எட்டாவது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் கான்வென்சன் மையத்தில் நடைபெற்றது. இங்கு 2481 மாணவ மாணவிகள் பி.டெக், எம்.பி.பி. எஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் தேர்வில் வெற்றி பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அத்துடன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடன மற்றும் திரைப்பட நடிகை ஷோபனா, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்புச் செயலாளர் சதீஸ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜ சபாபதி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், டாக்டர் பட்டம் தான் இப்போது மலிவாகப் போய்விட்டது. எல்லோரும் தான் வாங்குகிறார்கள். சாதாரண ஆட்களும் தான் டாக்டர் பட்டம் வாங்குகின்றனர்.
எனவே ஒரு முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் தவறில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சு முதலில் கலாய்ப்பதை போல் இருந்தாலும், பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு பேசி முடித்துள்ளார்.