இந்தியா

கோடிகளில் கருப்பு பணம்… : சிக்கலில் கல்கி பகவான்..!

ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்திவரும் இவருக்கு சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன. பிரமாண்ட மாளிகையில் ஆசிரமம், முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பெங்களூரில் மிகப்பெரிய தொழில் நிறுவனம், உலக நாடுகளில் ஆசிரமங்கள் என கல்கி பகவான் நடத்திவந்த நிறுவனங்களில் கடந்த 16-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஸ்ரீபகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்களில், பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தச் சோதனை 6 நாள்களுக்குப் பிறகு முடிவுக்குவந்தது. சோதனையில் சிக்கியவற்றைப் பற்றி வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவந்த ஒயிட் லோட்டஸ் குழு நிறுவனத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.93 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

26 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி மதிப்புள்ள 1,271 கேரட் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு கரன்சிகள் 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 18 கோடி), தமிழகம் ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் நிலங்களில் முதலீடுகள் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டி வருவாயாக வந்த ரூ.90 கோடியை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சோதனையில் கல்கியின் பல்வேறு ஆசிரமங்களில் நன்கொடைகளை மறைத்ததற்கான ஆதாரங்களும், ஊழியர்களின் மூலம் பண வசூல் நடத்தியதும், சொத்துகளை நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளுக்கு மேல் விற்று கறுப்பு பணம் பதுக்கி வைத்திருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, கல்கி பகவான், மனைவியுடன் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் பரவின. இது அவரது பக்தர்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, கல்கி பகவான், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, முதலில் நாங்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. வேறு எங்கேயும் செல்லவில்லை. நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்; நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறோம்; உடல்நலத்தில் எந்தப் பிரச்னையுமில்லை என்பதை பக்தர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் பக்கம் நின்ற பக்தர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சமூகவலைதளங்களில் நல்ல கருத்துகளை தெரிவித்தவர்களுக்கும் நன்றி. நாங்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகப் பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. எங்களுக்குத் தெரியும். இந்தியா மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நாங்கள்தான் பலம். அவர்கள் எங்களைச் சார்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வைத் தருகிறோம்.

அதன் காரணமாக நாங்கள் எங்கேயும் வெளியேறவில்லை. இங்கே தான் இருக்கிறோம். நாங்கள் உங்களின் உண்மையான நண்பர்கள். உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் படலம் தொடரும். தொடர்ந்து உங்களுக்கு உதவுவோம். சிலர், நாங்கள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டதாக நினைக்கிறார்கள்; அப்படியில்லை. எதுவும் கைவிடப்படவில்லை. எல்லாம் வழக்கமான முறையில்தான் நடைபெற்று வருகிறது. அரசாங்கமோ, வருமானவரித்துறையோ நாங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகச் சொல்லவில்லை. ஆனால், இந்த ஊடகங்கள்தான் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறிவருகின்றன” என்றார். `நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்’ என்ற யூகங்கள் பரவிய நிலையில், அதனை மறுத்து இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் வருமானவரித்துறை சோதனை குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, தன்னுடைய பல்வேறு ஆசிரமங்கள் வழக்கமான முறையில் எந்த இடையூறுமில்லாமல் செயல்பட்டு வருகின்றன. யாரும் கவலைப்படவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

  • சுப்பிரமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button