அமைச்சர் ஊரிலேயே “அரசாணை”யை மதிக்காத டாஸ்மாக் மேலாளர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சென்னிமலை சாலையில் டாஸ்மாக் கடை ( கடை எண்: 3996 ) செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள், மதுபான பாட்டில்களின் விலையைக் காட்டிலும் 10 ரூபாய் அதிகமாக வாங்கிக் கொண்டு விற்பனை செய்கிறார்கள் என ஆதாரத்துடன் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மதுபான பாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையைக் காட்டிலும் அதிகமாக வசூலிக்க கூடாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் முத்துச்சாமி எச்சரிக்கையும் விடுத்தார். ஆனாலும் திருந்தாத டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் பாட்டில் விலையைக் காட்டிலும், அதிகமாக 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஊத்துக்குளி சென்னிமலை சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை ( கடை எண்: 3996 ) மேலாளர் லாரன்ஸ் என்பவர், மதுபானம் வாங்குவதற்கு வந்த வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் அதிகமாக கேட்டு மதுபானம் கொடுக்க மறுக்கிறார். பின்னர் பத்திரிகையாளர் ஒருவருக்கு 1030 ரூபாய்க்கு இலவசமாக மதுபானம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை வாடிக்கையாளரிடம் தான் வசூல் செய்வேன் எனவும் சவடால் பேசுகிறார். இதுபோன்ற தமிழக அரசின் அரசாணையை மதிக்காத ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.