ரேஷன் அரிசி கடத்தியவரை கைதுசெய்த போலீசார் ! 2150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !

சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட போலீஸார், திருவெற்றியூர், கார்க்கில் வெற்றி நகர், ஜவான் பழனி தெருவில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த TN 03 R 6729 HONDA ACTIVA இருசக்கர வாகனத்தில் மூன்று மூட்டைகளை ஏற்றிச் சென்ற நபரை பின்தொடர்ந்து சென்றபோது, ஜவான் பழனி தெருவில் உள்ள வீட்டில் மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, கார்க்கில் நகர், திருவெற்றியூர் ஆகிய சுற்று வட்டாரங்களில் பெயர் விலாசம் தெரியாத பொதுமக்களிடமிருந்து, குறைந்த விலைக்கு வாங்கி, 2150 கிலோ ரேஷன் அரிசியை எந்தவித அனுமதியும் இன்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

குறைந்த விலைக்கு பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்ட ரேஷன் அரிசியை இட்லி, தோசை மற்றும் இடியாப்ப மாவு கடைளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரேசன் அரிசியை கடத்தி, பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம் என்பவரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
— கே எம் எஸ்