கனிமவளக் கடத்தல், கோட்டாட்சியருக்கு 2 கோடி லஞ்சம் ! ஆடியோ ஆதாரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், கிராவல் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் உரிய ஆவணங்கள் பெறாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினசரி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் இந்திய விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த பெரியசாமி என்பவர் “தினசரி 300க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கிராவல் மணல், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கனிம வள கடத்தல் நடைபெறுவதாகவும், அதனைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு கோட்டாட்சியருக்கு மாதம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்படுவதாக” பரபரப்பு தகவலை பதிவு செய்தார். இதனால் அரசு அலுவலர்களும் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது குறித்த ஆடியோ தம்மிடம் உள்ளதாகவும் அதை வெளியிட உள்ளதாகவும் கூறி மேலும் அதிர்ச்சியடையச் செய்தார்.
இந்த நிலையில் 17-06-2023 அன்று இரவு கேரளா பதிவு எண்கள் கொண்ட ஐந்து லாரிகளில் உடுமலையிலிருந்து கேரளாவிற்கு ஜல்லி கற்களை உரிய அனுமதி ஆவணங்கள் இல்லாமல் ஜல்லி கற்களை கொண்டு செல்வதை அறிந்த வருவாய்த் துறையினர். உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் கண்ணாமணி உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
பல மாதங்களாக பல்வேறு கனிம வள கடத்தல் குறித்த புகார் எழுந்த நிலையில், புகார்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த சூழ்நிலையிலும் “இரண்டு கோடி லஞ்சம், ஆடியோ வெளியீடு” என்று அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவலுக்கு பின்னர் வருவாய்த்துறையினர் அதிரடி காட்டி வருவதால் பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் சந்தேகம் அடைந்துள்ளனர்.
_ தி.கார்வேந்தபிரபு.