தமிழகம்

சர்ச்சைகள் நிறைந்த சங்கமாக மாறிய தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில மாதங்களாக சங்கத்தின் சட்டதிட்டங்களில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக வழக்குகள், வழக்குகளை காரணம் காட்டி பதவிக்காலம் முடிந்தும், இதே நிர்வாகிகள் சங்கத்தை நிர்வகித்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் என சர்ச்சைகள் நிறைந்த சங்கமாக மாறியிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இது சம்பந்தமாக விசாரித்தபோது… இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும், போட்டியிடுகின்றனர். முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இதேபோல் மன்னன் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் திடீரென மைக்கேல் ராயப்பன் முரளியைச் சந்தித்து அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் வெற்றிபெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை எத்தனை அணிகள் போட்டியிட்டாலும், இறுதிவரை அதே அணியில் தான் தேர்தலைச் சந்திப்பார்களே தவிர இதுபோன்று குதிரை பேரம் பேசி ஆட்களைத் தூக்கியதில்லை என்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் கார்பரேட் நிறுவனத்தினர். இவர்கள் ஏன் திடீரென தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால், முரளியும், வி. கிரியேஷன்ஸ் தாணுவும் தற்போது கடனில் தத்தளித்து வருகிறார்களாம். ஆகையால் கார்பரேட் நிறுவனங்களில் பலகோடி கடன் பெறும் நோக்கத்தில் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் இருவருக்கும் பதவி ஆசையைத் தூண்டி தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் வெற்றிபெற வைக்கிறோம் என வாக்குறுதி அளித்து அழைத்து வந்தார்களாம்.

ஆனால் இருவரது எண்ணத்திற்கு மாறாக மன்னன் அணியில் மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் பலமான வேட்பாளர்களாக பேசப்பட்டதால் ஒருவார காலமாக முரளி மிகவும் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகினாராம். அப்போது தாணு முரளியை சமாதானம் செய்து மன்னன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மைக்கேல் ராயப்பனை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள குதிரை பேரம் பேசுமாறு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சந்திரபோஸை மைக்கேல் ராயப்பனிடம் பேரம்பேசி அழைத்து வருமாறு நியமித்திருக்கிறார்கள்.

மைக்கேல் ராயப்பனை வாபஸ் வாங்க வைப்பதற்காக கார்பரேட் நிறுவனத்தினரிடம் சில கோடிகளைப் பெற்றுக்கொண்டு மைக்கேல் ராயப்பனுக்கு சில கோடியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை தாணுவும், முரளியும் பங்கு போட்டுக் கொண்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகிறார்கள். அரசியலில் சுயலாபத்துக்காக அணி மாறிய மைக்கேல் ராயப்பன் சங்கத்தில் அணிமாறியது ஒன்றும் புதிதல்ல எனவும் பேசி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களிடம் தேதியை பெற்று மற்ற தயாரிப்பாளர்களுக்கு சிரமத்தை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை அழித்தவர்தான் தாணு. இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைப்பதற்காக முழு முயற்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.

முரளியின் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர் எஸ்.ஏ. சூர்யா தனக்கு தரவேண்டிய நான்கு கோடி பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும், அவரிடம் பணத்தை பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளரின் புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பேரம் பேசியதோடு கட்டப்பஞ்சாயத்து செய்தாராம் முரளி. மேலும் தமிழ்க்குமரனின் படத்திற்காக விதிகளை மீறி இரவு 11 மணிக்கு சங்கத்தைத் திறந்து சென்சார் கடிதத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளாராம் முரளி.

தற்போது தாணு, முரளி கூட்டணி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல கோடிகளைப் பெற்று பரிவர்த்தனை செய்வதற்காகத்தான் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் ஆகிய இருவருக்காக மைக்கேல் ராயப்பனை குதிரை பேரம் பேசி அழைத்து வந்திருக்கிறார்கள் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முரளி இதுவரை எந்த தயாரிப்பாளர் வீட்டிற்கும் சென்று தனக்கோ அல்லது தனது அணியினருக்கோ வாக்குகள் கேட்கவில்லை. அவரது கவனம் முழுவதும் அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் இருவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்கிறார்கள் அவரது தரப்பினர்.

இது சம்பந்தமாக முரளி குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போது.. இந்த தேர்தல் தற்போது விஷாலை நோக்கிச் செல்கிறது. எது எப்படியானாலும் எனக்கு ஒன்றுமில்லை, என சங்கடத்தோடு பேசியிருக்கிறார். மேலும் இதுசம்பந்தமாக விஷால் தரப்பினரை தொடர்பு கொண்டபோது.. (12.4.2023) மன்னன் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கமிலா நாசர் விஷாலை சந்தித்து ஆதரவு கேட்க அணியினருடன் வருவதாகக் கூறினாராம். மன்னன் வரவேண்டாம் நீங்கள் வாருங்கள் என விஷால் கூறியிருக்கிறார். மேலும் தனது ஆதரவாளரைத் தொடர்பு கொண்டு முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்ச்சனா, மன்னன் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கமிலா நாசர் இருவருக்கும் நமது ஆட்களிடம் வாக்களிக்கச் சொல்லுங்கள் என பேசியிருக்கிறார்.

தலைவர் பதவியை பொறுத்தவரை இருவரும் விஷாலுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டதால், தீவிரமாக யோசித்து வருகிறாராம். தாணுவை தீயசக்தி என்று நிரூபித்துத்தான் விஷால் தலைவரானார். அந்த தாணு இன்று முரளிக்கு ஆதரவாக இருப்பதோடு, லைகா தமிழ்குமரனை கொண்டு வந்திருக்கிறார். இதோடு முரளிக்கு விஷாலின் “கதக்களி” படம் வெளியிட்டதில் மூன்று கோடி தரவேண்டியிருக்கிறதாம். இதனால் முரளிக்கு எப்படி விஷால் ஆதரவு தெரிவிக்க முடியும் என்கிறார்கள்.

முரளி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக இருப்பது போலவும், உதயநிதியின் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது எனவும் பேசி வருகிறாராம். ஆனால் ஆளூம்தரப்பினர் இந்த தேர்தலில் முரளிக்கு ஆதரவாக தலையிட விரும்பவில்லை என தெரிவித்து விட்டனராம். இதற்கு மாற்றாக மன்னன் தரப்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரது வங்கிக் கணக்கில் ஐந்து லட்சம் ரூபாய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர் செலுத்தியிருக்கிறார். இதை சம்பந்தப்பட்ட நபரே காண்பிக்கிறார் என்றால் ஆளும் தரப்பினர் ஆதரவு முரளிக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது என்கிறார்கள்.

விஷால் இந்தத் தேர்தலில் தலையிடுகிறார் என்கிற தகவல் தெரிந்தவுடன், இரு அணியினரும் கலந்து ஜெயிக்க வேண்டும் என விஷால் விரும்புவார். இனி நமது எண்ணம் நிறைவேறாது, ஏற்கனவே எஸ்.ஏ. சந்திரசேகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். விஷாலும் தலையிட்டால் நமது பொழப்பு அவ்வளவுதான். இனி ஒதுங்கி இருக்கலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாராம் தாணு. முரளியைப் பொறுத்தவரை எது நடந்தாலும் பரவாயில்லை. நாம் ஃபிலிம் சேம்பரில் தலைவராகிவிடலாம் என்கிற மனநிலையில் இருக்கிறாராம்.

முரளியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக்கிவிட்டால் நாம் ஃபிலிம் சேம்பர் தலைவராகிவிடலாம் என்கிற கனவில் இருந்த தாணுவின் நிலைமை..?.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button