பாலியல் புகார்… கலாஷேத்ராவில் நடந்தது என்ன?
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மூத்த ஆசிரியர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் சீண்டல் நடைப்பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் பிரபல நடன இயக்குனரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனருமான லீசா சாம்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பின்பு அதை நீக்கினார்.
இது குறித்து கலாஷேத்ரா அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட விசாரணை குழு கடந்த மார்ச் 19ஆம் தேதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கலாஷேத்ரா அறக்கட்டளைகளில் பாலியல் சீண்டல்கள் எதுவும் நடைப்பெறவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு எதிராக கலாஷேத்ராவில் கல்வி கற்கும் மாணவிகள் தற்போது போர் கொடி ஏந்தினர். அவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அப்பள்ளியில் 2019 ஆம் ஆண்டு நடனம் பயின்ற முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றினை அளித்தார்.
இந்த புகாரில் தான் நடனம் பயின்ற பொழுது நடன பள்ளி உதவி ஆசிரியர் ஹரிஷ் பத்மன், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் புகார் அளித்த கேரளாவை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை அடையாறு உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய தனிப்படை போலீசார் கேரளா மாநிலத்திற்கு சென்றனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஹரி பத்மன் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை ஹைதராபாத்தில் வைத்து சென்னை காவல்துறை கைதுசெய்தது. பின்னர் சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக நடிகையும், ‘பிக்பாஸ்’ பிரபலமுமான அபிராமி தெரிவித்த கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
அதில், அடையாறு கலாஷேத்ரா குறித்து அவதூறு செய்திகளை கேட்டு, முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் உணர்வுப்பூர்வமாக குரல் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தான் எந்தவித விளம்பரமும் தேடிக் கொள்ளவில்லை எனவும், தனது தோழி மூலமாக தன்னை தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்க நிர்மலா என்ற பேராசிரியர் முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
தான் படிக்கும் காலத்தில் அப்போது இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது அவதூறாக பல்வேறு குற்றச்சாட்டுகளை நிர்மலா மற்றும் நந்தினி ஆகிய பேராசிரியர்கள் சுமத்தியதாகவும், படிக்கும் மாணவிகளை காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று தவறாக வழிகாட்டி செயல்பட தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்று தற்போது உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கும் நடக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் என்பவர், ஹரி பத்மன் கலாஷேத்ராவை எடுத்து நடத்த வேண்டும் என்று பாராட்டி பேசியதன் அடிப்படையில், ஹரி பத்மன் மீது அவதூறு பரப்புவதற்காக மாணவிகளை தவறாக வழிநடத்தி தூண்டி விடுவதாக நடிகை அபிராமி புகார் தெரிவித்துள்ளார்.
உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனால், தனக்கும் தன் சக தோழிகளுக்கும் தாங்கள் படிக்கும் போது எந்தவித பாலியல் தொந்தரவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள மாணவர்களை பலியாடுகள் போல் இந்த இரண்டு பேராசிரியர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலாஷேத்ராவில் அதிகாரத்தை பிடிப்பதற்காக இதுபோன்று நடைபெறுவதாகவும் கூறியுள்ள அவர், இந்த நிறுவனத்தில் அதிகாரம் கிடைப்பதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் எனவும், அடுத்தவர்களை குற்றம் சாட்டி வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பாலியல் தொந்தரவு குறித்து கருத்து பதிவிட்ட முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் தவறான வழிகாட்டுதல் காரணமாக பதிவிட்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார். ஹரி பத்மன் பேராசிரியராக மிகவும் நல்லவர் எனவும், அவர் மீது பொறாமை பட்டு இது போன்று குற்றம் சாட்டியுள்ளார்கள் என்றும் நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். ஹரி பத்மனுக்கு பாராட்டுக்கள் நிறுவனத்தில் கிடைக்க ஆரம்பித்தவுடன், இது போன்று குற்றச்சாட்டுகள் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரி பத்மன், முதுநிலை மாணவர்களுக்கு மட்டுமே பாடம் எடுப்பதாகவும், குற்றம் சாட்டிய 100 மாணவிகளை ஹரி பத்மன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளாரா என்றும் நடிகை அபிராமி கேள்வி எழுப்பி உள்ளார். போராடிய மாணவர்களுக்கு சில சலுகைகளை செய்து தருவதாக கூறி, தவறாக வழி நடத்தியுள்ளதாக பேராசிரியர்கள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் இந்தியாவின் அடையாளமாக இருக்கும் அடையாறு கலாஷேத்ராவை அவதூறு செய்வது தவறு இல்லையா என கோபத்துடன் அவர் கூறியுள்ளார்.
காவல்துறையினர் விசாரித்துத்தான் பாலியல் தொந்தரவு மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதற்குரிய பதில் அளிக்காமல் மலுப்பலாக பதில் அளித்தார்.
பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அதன்பின்பு கலாஷேத்ராவில் பாலியல் தொந்தரவு நடக்கவே இல்லை என தெரிவிக்கவில்லை என்றும், தனக்கு நடக்கவில்லை என்றே கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார். மாணவர்களை பேராசிரியர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று மீண்டும் அவர் குறிப்பிட்டார்.
போராடிய மாணவர்களுக்கு சலுகை அளிப்பதாக கூறி, இதுபோன்று பாலியல் புகார்களை தெரிவிக்குமாறு தவறாக வழிநடத்த வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், பேராசிரியர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை மாணவர்கள் வெளிப்படுத்த பயப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும், வார்த்தைகளால் தொந்தரவு செய்வதாகும் மாணவர்கள் குற்றம் சாட்டுவதாக தெரிவித்ததற்கு, பதில் அளிக்க முடியாமல் திணறினார். பின் சாதி ரீதியாக பாகுபாடு நடத்தப்படவில்லை என நடிகை அபிராமி கூறியுள்ளார்.
சாதியை பாகுபாடு கடந்த 2017 ஆம் ஆண்டு வரை நடைபெறவில்லை எனவும், அதன் பின்பு நடைபெற்றிருந்தால் தானே சென்று கேள்வி எழுப்புவேன் என கூறிய நடிகை அபிராமி, மாணவர்களின் குற்றச்சாட்டுகளை முழுமையாக தெரியாமல் மலுப்பலாக பேசி திணறினார். மாணவர்கள் தவறாக நடக்கும் பொழுது கண்டிப்புடன் செயல்பட்டதற்காக, சாதாரணமாக கூறியதை பெரிதாக்கியுள்ளார்கள் என தெரிவித்த அவர், தன்னை உடல் ரீதியாக கேலி செய்த போதும் கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அபிராமியின் கருத்து தொடர்பாக நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இது மிகவும் தவறான விஷயம். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு, அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது, ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்.
இதற்கெல்லாம் ஆதாரமா கொடுக்க முடியும். ஒரு பெண் குழந்தை ஸ்கூலில் இவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொல்லும்போது அங்கு என்ன நடந்திருக்கிறது என்று அந்தக் குழந்தைக்கு மட்டும்தான் தெரியும். இதற்கெல்லாம் ஆதாரமா கொடுக்க முடியும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
– நமது நிருபர்