ஆளுநர் மீது வழக்கு..?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய செயல்பாடுகளைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது தெரிந்ததும், உடனடியாக சிலமணி நேரங்களில் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழ்நாடு ஆளுநர். சட்டமன்றத் தீர்மானமும், ஆளுநர் ஒப்புதலும் இந்திய அளவில் முதலமைச்சர் ஸ்டாலினின் இமேஜ் உயர ஆளுநரே காரணமாகி உள்ளார் என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து அந்த தீர்மானம் மக்கள் நலனுக்காக சட்டநடைமுறைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பண நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாமல் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். அதேபோல் தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடையும் விதித்துள்ளது. இனிமேல் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க நிரந்தர தடைவிதித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காலவரையரை இல்லாமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார் ஆளுநர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சந்தேகம் இருந்தால் திருப்பி அனுப்பி திருத்தங்களை கோரியிருக்கலாம். அல்லது ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து அனுப்பி இருக்கலாம். எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு வியாக்கியனமாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்த விஷயத்தில் ரவி மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் உள்ள அனைத்து ஆளுநர்களும் ஆளும் மாநில அரசுக்கு எதிரான மனநிலையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
அரசியல் சாசனத்தில் ஆளுநர் முடிவுகள் எடுப்பதற்கு காலக்கெடு எதுவும் விதிக்காததால், அதையே காரணமாக வைத்து மக்கள் நலன் கருதி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வரும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி பாரதிய ஜனதா ஆளாத மாநில முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளுநர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதப்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். அரசியல் சாசன விதிகளை பூர்த்தி செய்யாமல், பொதுவெளியில் உரையாற்றும் போது, மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாக கருதலாம் என்று பேசியதே அரசின் ரகசியத்தை வெளியில் சொல்வதற்கு சமம்.
ஆகையால் ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்தையும் மீறியுள்ளார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற வாதங்களை வைத்து ஆளுநர் மீது வழக்கு தொடரலாம் என பொதுநல நோக்கர்கள் பேசி வருகிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் தனது ஆளுநர் பணியை செய்யாமல் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய பணிகளையே தொடர்ந்து செய்து வருகிறார் என சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் பேசப்படுகிறது. சமீபத்தில் குடிமைப்பணி மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்துக்களைப் பேசியதால் தான் அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தது. அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பணம் இந்த ஆளுநரால் விரயம் செய்யப்படுகிறது என்கிற பேச்சும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஆளுநர் ரவியின் அநாகரீகமான செயல்பாடுகளால் தான் அவருக்கு எதிராக கண்டனம் தீர்மானமும் நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது. காலையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மாலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிகழ்வு தொடக்கம்தான் இனிமேலும் தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கு எதிராக ஆளுநர் ரவி நடந்து கொண்டால், ஆளுநரை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.
– சூரியன்