நெருக்கடியில் லஞ்சம், சொத்துக் குவிப்பு, டெண்டர் முறைகேடு வழக்குகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தமாக ஓ.பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் நீதிமன்றத்தில் பலமாதங்களாக தங்களது வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி வந்தனர். சில நாட்களுக்கு முன் அதிமுகவை வழிநடத்த தற்போதைக்கு தலைமை தேவை. ஆகையால் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். மேலும் பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஏழு நாட்களுக்கு முன்னதாக கடிதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லும் என்றால் பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியதும் செல்லும் தானே என்று பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினரும், பன்னீர்செல்வத்தை பழனிச்சாமி அணியினர் நீக்கியது செல்லும் என்று நீதிபதிகள் கூறவில்லை. அதேபோல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இல்லை என்று இதுவரை எந்த நீதிபதியும் கூறவில்லை. ஆகையால் பன்னீர்செல்வம்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று பன்னீர்செல்வம் அணியினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பழனிச்சாமிக்கு ஆதரவாக தற்போது கட்சியை வழிநடத்துவதற்கு பொதுச்செயலாளர் தேவை என நீதிபதிகள் கூறியதை ஏற்காத பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்து தனக்கான நிவாரணம் வழங்குமாறு கோரியிருந்தார். பன்னீர்செல்வத்தின் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஏப்ரல் 20 க்கு வழக்கை ஒத்திவைத்தனர். மீண்டும் பன்னீர்செல்வத்தின் மனு விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் பழனிச்சாமிக்கு ஆதரவோடு நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை பழனிச்சாமி பொதுச்செயலாளராக செயல்பட நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
2011-&2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியின் வழக்கை விரைந்து முடித்து திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நியமனம் செய்வதற்காக பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பலகட்ட விசாரணைக்கு பிறகு செந்தில்பாலாஜியை வழக்கிலிருந்து விடுவித்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கை தற்போது தீவிரப்படுத்தி வருவதாக தெரியவருகிறது. செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி இவர் விடுதலை செய்யப்பட்டதில் உள்ள குளறுபடிகளை கண்டறிந்து, சட்ட நுணுக்கங்களை கூர்ந்து கவனித்தால் செந்தில் பாலாஜி சிக்கப்போவது உறுதி எனவும், அதற்கான வேலைகளை சிலர் தீவிரப்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
அதே காலகட்டத்தில் 2011- 2016 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு 25 கோடி லஞ்சம் கொடுத்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான வழக்கும் தூசிதட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறதாம். அதேபோல் எஸ்பி வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பார்வை எஸ்பி வேலுமணியை நெருக்கடிக்கு உள்ளாக்குவதுபோல் உள்ளதாக தெரியவருகிறது. எஸ்பி வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், செந்தில்பாலாஜி மீதான வழக்கும் விரைவாக இறுதிக்கட்டத்திற்குச் செல்ல இருக்கிறதாம். சில மாதங்களில் எஸ்பி வேலுமணியும், செந்தில் பாலாஜியும் இதுவரை சந்திக்காத நெருக்கடியை சந்திப்பார்கள் என டெல்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் எஸ்பி வேலுமணிக்கு உச்சநீதிமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டால், அதை தன்மையுடைய டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதையெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை அமைதியாக கவனித்து வருகிறதாம். இந்த தீர்ப்புகளுக்குப் பிறகுதான் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் நகர்வுகள் வேகமெடுக்கும் என்கிறார்கள்.
– குண்டூசி