சரக்கு போக்குவரத்து, ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்…!
தலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023” மற்றும் “தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்” ஆகியவற்றை வெளியிட்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது…
”தமிழ்நாடு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பன்நோக்கு திட்டங்களைப் பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்திடவும், முதலமைச்சர் நிர்ணயித்துள்ள 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கினை அடைந்திட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள்வரை 209 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2,34,123 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 3,49,261 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்றது முதல் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை 2021, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022, தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023 ஆகிய கொள்கைகள் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரால் இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023 மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, சிக்கனமான, நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போட்டித்திறனை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பினை உருவாக்குதல், குறைந்த செலவிலான மற்றும் உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல், சரக்கு போக்குவரத்து சூழல்அமைப்பின் மீள்திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்தல், புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல், சரக்கு போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
இக்கொள்கையின் மூலம் சரக்கு போக்குவரத்து துறைக்கு, “தொழில் அந்தஸ்து வழங்குதல், “ஒற்றை சாளர அனுமதி” வழங்குதல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும்.
“சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்” மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்புத் திட்டமானது, உயர் மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதித் திறன் கொண்ட புதிய தலைமுறை ஜவுளி பிரிவுகள் (தொழில் நுட்ப ஜவுளி/ செயற்கைஇழை நூல்) மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் வழங்குதல், பெரிய திட்டங்களுக்கு சற்றே குறைவாக உள்ள முதலீடுகளுக்கும் அதிக அளவிலான ஊக்கத் தொகை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஊக்குவித்து, இத்துறையை பல்வகைப்படுத்துதல், மாநிலம் முழுவதும், முக்கியமாக தொழில்ரீதியாக வகை செய்யப்பட்டுள்ள ‘ஙி’ & ‘சி’ வகை மாவட்டங்களில் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை குறித்து விளக்குகிறது.
இந்த நிகழ்ச்சியில், வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு., வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் ம.பல்லவி பல்தேவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.