தமிழகம்

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து… நடவடிக்கை என்ன..?

கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும், அதிகாரிகள் இருப்பதனால் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என கூறிய தலைமை நீதிபதி, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் விபரங்களை பெற்று தெரிவிக்கும்படி தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது துவங்கப்படும் என தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழகத்திற்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி குறித்து விளக்கம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் புதிய அரசு பதவியேற்று, புதிய அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க இரண்டு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளும் என தெரிவித்த தலைமை நீதிபதி, தற்போது வரை எடுத்து இருக்கக்கூடிய சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் இடம் பெற்று தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறார்.

மேலும், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தரப்புக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தொலைக்காட்சி பத்திரிக்கைகளில் திமுகவினரின் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள் வெளியானதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வில்சன், உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு இந்த கொண்டாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும், கொண்டாட்டங்கள் கூடாது என்று கட்சித் தலைவரே அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்த கோரியும், தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஆயுர்வேதா கிளினிக்குகள் அமைக்கக் கோரியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனிக்க உறவினர்களை அனுமதிக்கக்கூடாது என கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button