தமிழகம்

திருப்பூரை அதிர வைக்கும் ஜி.எஸ்.டி மோசடி ! ஏழை பெண்கள் பெயரில் போலி பில் தயாரித்த கும்பல் !

திருப்பூர் மாவட்டம் சர்வதேச அளவில் பின்னலாடை துறையில் தடம் பதித்து ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பின்னலாடை துறையை நம்பி சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். பின்னலாடை துறையில் வெளிநாட்டுக்கு ஆர்டரின் பேரில் பனியன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிற்கு தேவையான பனியன்களை உற்பத்தி செயவதற்கென உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன் பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி ( ஜி.எஸ்.டி) கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 0%, 5%, 12%, 18% என வரி விதிக்கப்பட்டது. இதன்படி பின்னலாடைக்கு 5% வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னனு வழி ரசீது உருவாக்கப்படவேண்டும் என 2018 ஆம் ஆண்டு முதல் சட்டம் அமுலுக்கு வந்தது. இதனையடுத்து வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர்.

இதனிடையே போலி ஜி.எஸ்.டி பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டரை வீதி பெத்தச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நிராகரிக்கப்பட்டன. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் ரூ. 50 லட்சம் மதிப்பில் ஜிஎஸ்டி நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது. இதனை அடுத்து சமூக ஆர்வலர் இப்ராஹிமிடம் பெண்கள் முறையிட்டனர்.

மேலும் தீவிரமாக விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்று போலியாக ஜிஎஸ்டி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி போலி பில்கள் மூலமாக வட மாநில வியாபாரிகளுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லும் போது போலி பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் வணிகவரித்துறைக்கு நடவடிக்கை கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நடராஜா தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் குடியிருந்து வந்த ஏழை பெண்கள் நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்த போதுதான் மேற்படி பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சுமார் 5000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு உழைப்பாளர்களின் சொர்க்க பூமியான திருப்பூரின் தொழிலை காக்க மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button