“பழனிசாமியால் அதிமுக பொதுச்செயலாளராக முடியாது!” : வைத்திலிங்கம் திட்டவட்டம்
அதிமுக இரட்டைத் தலைமை விவகாரத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் அணியிலிருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். வைத்திலிங்கத்தைச் சோழமண்டல தளபதி என அழைத்து, அவருடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த நிர்வாகிகள் பலர் வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்து, இ.பி.எஸ் அணிக்குச் சென்றனர். தன் சொந்த மாவட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் சென்ற நிலையிலும், சோர்ந்துவிடாமல் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார் வைத்திலிங்கம்.
மேலும், தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார். இந்த நிலையில், தஞ்சை வடக்கு, தெற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வைத்திலிங்கம் தலைமையில் தஞ்சாவூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பெரிய அளவில் திரண்டிருந்த கூட்டத்தால் வைத்திலிங்கம் உற்சாகமாகக் காணப்பட்டார்.
மேடைக்கு வந்த அவர் நிர்வாகிகள் சிலரிடம், உண்மையின் பக்கம் நிற்பவர்கள் நம்மிடம் வருவார்கள்... நமக்கு கூட்டம் வரும், பெரிய இடத்தில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யச் சொன்னது இதற்குத்தான்" என்றார். பின்னர் பேசிய வைத்திலிங்கம்,
எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனச் சட்டவிதி வகுத்திருக்கிறார். அதை யாராலும், எந்த நிலையிலும், இன்னும் 50 வருடங்கள் ஆனாலும் மாற்ற முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர்தான் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருப்பார் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரஸ்வதி சபதத்தில், கே.ஆர்.விஜயா யாசகம் செய்பவராக வருவார், யானை மாலை போட்டு வரவேற்கும். அதுபோல் தரையில் தவழ்ந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, தகுதி, நன்றி, விசுவாசம் இல்லாமல் நடந்துகொள்கிறார். அவரை உருவாக்கிய சசிகலாவை சிறையிலிருந்து வரக் கூடாது என நினைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
அன்று நான் நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது. இந்தக் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், சின்னாபின்னமாகிவிடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் அவர் முதலமைச்சராவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். அதன் பின்னர்தான் பேராசை கொண்ட சுயநலக்காரரிடம் கட்சி சென்றுவிட்டது எனத் தெரிந்தது. யார் கெஞ்சினாலும் செய்யக்கூடிய நல்ல மனம் படைத்தவர் ஓ.பி.எஸ். அவரிடம் கெஞ்சி கையொப்பம் வாங்கியவர், இன்றைக்கு அவரையே நீக்குகின்ற நிலைக்கு வந்துவிட்டார்.
இ.பி.எஸ் பிக்பாக்கெட் அடிக்கிற செயலைச் செய்கிறார். இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலையில், ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பியிருக்கிறார். தைரியம், திராணி இருந்தால் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுத்து பொது இடத்தில் வாக்குப்பெட்டியை வைத்து பொதுச்செயலாளராக ஆக முடியுமா.
ஜெயலலிதா வந்தால் பத்து அடிக்கு முன்னால், சசிகலா வந்தால் 15 அடிக்கு முன்னால் அவர்கள் காலில் விழுந்தவர்கள் எல்லாம் இன்றைக்குப் பேசுகின்றனர். ஜெயலலிதா மறைந்த பிறகு பதவியில் இருந்தவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல்… கட்சியை சின்னா பின்னமாக்கி கொண்டிருப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தலில் பல தோல்விகளைச் சந்தித்தவர், முதலைமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எட்டு முறை தோல்வியைக் கண்ட இ.பி.எஸ்-ஸுக்கு கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லை.
சர்வாதிகாரியான அவர் கையில் கட்சி சென்றால் சாதிக் கட்சியாக மாறிவிடும். ஐந்து ஆண்டுக்காலம் எடப்பாடி பழனிசாமியுடன் தினமும் மூன்று மணி நேரம் இருந்திருக்கிறேன். அவர் குணம் எனக்குத் தெரியும், தொண்டனை மதிப்பதில்லை, பார்ப்பதில்லை. கான்ட்ராக்ட்காரர்கள் மட்டுமே அவர் வீட்டில் இருப்பார்கள். ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தபோது அவரைப் பற்றி சிலர் தவறாகக் கூறிய காரணத்தால் ஒரு விபத்தாக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, இன்று கட்சியைச் சொந்தமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைத்திலிங்கம், “அண்ணாமலை அ.தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது எனக் கூறியிருக்கிறார். அவர் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்தான். ஆனால், இதை ஜே.பி.நட்டா முடிவெடுப்பார்.
டி.டி.வி., சசிகலா என கட்சியைவிட்டுப் பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும், எல்லோரையும் ஒன்று சேர்த்துக் கட்சியை வலுப்படுத்துவோம். இது கூடிய விரைவில் நடக்கும். நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவே முடியாது” என்றார்.
– நமது நிருபர்