திருப்பூரில் கொத்து கொத்தாக விஷம் வைத்து கொல்லப்படும் மயில்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த உகாயனூர் அருகே பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான நாச்சியார் தோட்டத்தில் தேசிய பறவையான மயில்களை கொன்று எரிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்குள்ள தென்னந்தோப்பில் மயில்களை குழிதோண்டி அதில் மறைத்து வைத்து எரிப்பதற்குண்டான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
இதனை அடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெண் மற்றும் 7 ஆண் மயில்கள் என 19 மயில்களின் உடல்களை கைப்பற்றி பின்னர் தோட்ட உரிமையாளர் பழனிச்சாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தனது தோப்பில் தென்னை மரத்தை சுற்றி கட்டப்படிருந்த பாத்திகளை மயில்கள் கூட்டமாக வந்து சேதப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து அரிசியில் விஷம் கலந்து வைத்ததில் அதனை உண்ட 19 மயில்கள் இறந்ததாகவும், யாருக்கும் தெரியாமல் மயில்களை எரிக்க முயன்றபோது வனத்துறையினரிடம் மாட்டிக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதனை தொடர்ந்து இறந்த மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து பழனிச்சாமியை கைது செய்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போல் முத்தனம்பாளையத்தில் 24 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது. தொடர்ச் சியாக தேசிய பறவையான மயில்கள் விஷம் வைத்து கொல்லப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.