தமிழகம்

“செப்டம்பருக்குள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை தாக்கல்” -: சிபிஐ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு, எந்த முன்னறிவிப்பும் இன்றி தடை உத்தரவை பிறப்பித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும் எனவும் வாதிட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஒரு பக்க விசாரணைக் குறிப்பை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் தாக்கல் செய்தார். அதில், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை பதிவு செய்த 207 வழக்குகள், சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதுவும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் ஆவணங்களும், சிசிடிவி காட்சிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16-ஆம் தேதி விசாரணை நிலை குறித்த அறிக்கை உறுதியாக தாக்கல் செய்யப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பலியான 13 பேர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கலவரம் தொடர்பான விசாரணையில் காவல்துறை, வருவாய்த் துறை, போராட்டக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button