அரசியல்

இது இந்தியா… ‘இந்தி’யா அல்ல..! : அமித்ஷாவை எச்சரிக்கும் ஸ்டாலின்

ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விமுறை, ஒரே வரி என்ற வரிசையில், நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஏற்றது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. ஆட்சி மொழித்துறை என்ற பிரிவு இவ்விழாவினை நடத்துகிறது. இந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதன்முதலாக, 1975ம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மொழியின் எளிமை, தனித்துவம், மொழியின் தரம் ஆகியவையே உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு அர்த்தம் அளிக்கின்றன என்ற அவர், இதுபோன்ற பல்வேறு அம்சங்களை இந்தி மொழி அழகாகக் கொண்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.


அமித் ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி தாய் மொழி அல்ல. இந்த நாட்டில் உள்ள பல மொழிகளின் பன்முகத்தன்மையையும், அழகையும் போற்ற முயற்சிக்கக் கூடாதா? அரசியலமைப்பு சட்டத்தின் 29 சட்டப்பிரிவு, ஒவ்வொரு இந்தியருக்கும் மொழி மற்றும் பண்பாட்டு உரிமையை வழங்கியுள்ளது. இந்தி, இந்து, இந்துத்துவாவை விட இந்தியா மிகப் பெரியது,’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இந்தி தினத்தை முன்னிட்டு அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து, நாட்டின் பன்முகத்தன்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டின் பன்முகத்தன்மையை மதிப்பதும், பாதுகாப்பதும், வளர்ப்பதும்தான் இப்போதைய தேவை. அப்போதுதான் ஒற்றுமை உறுதி செய்யப்படும். உள்துறை அமைச்சரின் கருத்து கூட்டாட்சி மீதான தாக்குதல். ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியை திணிக்க மோடி-அமித்ஷா அரசு தொடர்ந்து முயற்சிப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற கொடிய முயற்சிகளில் இருந்து அரசு விலகியிருக்க வேண்டும்.’’ என கூறியுள்ளது.

இந்தி பேசும் மக்களுக்கு மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இந்தி திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்தி பேசும் மக்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைத்து கலாச்சாரங்களையும் மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். பல மொழிகளை நாம் கற்கலாம், ஆனால், நமது தாய்மொழியை ஒருபோதும் நாம் மறக்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் ஒன்றி இணைந்திருக்கும் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை. ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி’எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சியாகவே தெரிகிறது.

அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் தி.மு.க.வின் நிறுவனர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அன்று தொடங்கி இன்றுவரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது தி.மு.கழகம்.
அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பிரதமர் மோடி அவர்களும் இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனின், தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.கழகம் தயங்காது.

குடிமைப்பணி, ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிப்பணி என ஒவ்வொன்றாக இந்தியைத் திணிக்க முயற்சித்து, இப்போது இந்தியா என்கிற ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தி.மு.கழகம் தயாராக இருக்கிறது; இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகத்தில் திமுக உள்பட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் பாஜக ஆளும் கர்நாடகம் மற்றும் தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பி தெரிவித்தனர். பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இவை அனைத்துக்கும் மேலாக திமுக, தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தது. பல இடங்களில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், தான் அவ்வாறு கூறவில்லை என்று அமித்ஷா பின்வாங்கி உள்ளார்.

பாஜக அரசு பதவி ஏற்றது முதலே மக்கள் விரோத போக்கை கையில் எடுத்து அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய கல்விக்கொள்கை, நீட், வாகன அபராதம், ஜிஎஸ்டி என சமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளேயே தொடர்ந்து வருகிறது.
சமீப காலமாக இந்தி தொடர்பான கருத்துக்களையும் முன்வைத்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமித்ஷாவின் ஒரே தேசம் ஒரே மொழி; இந்தியே இந்தியாவின் பொதுமொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக தான் அப்படி பேசவில்லை, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாக பல்டி அடித்துள்ளார் அமித்ஷா.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில் தனது கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கூறவில்லை என்றும், தனது பேச்சை நன்றாக கவனித்தால் அது தெரியும் என்றும், 2-வது மொழி ஒன்றை படிக்க விரும்பினால் இந்தி கற்கலாம் என்றுதான் கூறியதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், தாம் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன்; இந்தியை திணிக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் எழுந்த மக்களின் எதிர்ப்பு காரணமாக முதன்முறையாக பணிந்துள்ளார் அமித்ஷா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button