பணம் அதிகமாக சம்பாதிப்பது இன்ஸ்பெக்டரா ? சாராய வியாபாரியா ? “வாத்தி” திரைவிமர்சனம்
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வாத்தி”
கதைப்படி… தனியார் பள்ளிகள் அரசுத் தேர்வுகள், நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. தனியார் பள்ளியின் தாளாளர் சமுத்திரக்கனி அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதாக அவரது பள்ளியில் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்களை தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்.
அவ்வாறு ஆந்திரா எல்லையில் உள்ள சோழவரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கணித ஆசிரியராக வருகிறார் தனுஷ். அந்தப் பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் ஆசிரியர்களுக்கு வேலையில்லாமல் வேறு வேலைகளை செய்து வருகின்றனர். பின்னர் தனுஷின் தீவிர முயற்சியால் 45 மாணவ, மாணவிகளை வர வைத்து பாடம் நடத்துகிறார். அவர்களை மருத்துவ, பொறியியல் படிப்புகள் படிக்க வைக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு உழைத்து மாணவ, மாணவிகளை இறுதித் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற வைக்கிறார்.
இதனை அறிந்த சமுத்திரக்கனி கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றால், தனியார் பள்ளிகளின் வருமானம் பாதிக்கும் என்பதால் தனுஷை மீண்டும் அவரது பள்ளிக்கே அழைக்கிறார். தனுஷ் தன்னை நம்பியிருக்கும் மாணவ, மாணவிகளை ஏமாற்ற விரும்பாமல் அங்கேயே இருக்கிறார். அவருக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார் சமுத்திரக்கனி.
கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். அவர்களும் மருத்துவம், பொறியியல் படிப்புகள் படிக்க வேண்டும். அவர்களை உயர் பதவிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற தனுஷின் லட்சியம் நிறைவேறியதா ? இல்லையா என்பது மீதிக்கதை…..
சோழவரம் கிராமத்தில் போதிய கல்விறிவு இல்லாமல் ஜாதி அடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என குழந்தைப் பருவத்திலேயே பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் பெற்றோர்கள், படித்த போலீஸ் இன்ஸ்பெக்டரை விட படிக்காத சாராய வியாபாரி அதிகம் சம்பாதிக்கிறான் என பெருமை பேசும் ஊர் தலைவர், இவர்களுக்கு மத்தியில் பள்ளிக்கூடம் இருந்தும் குலத்தொழிலை செய்துவருகிறார்கள் குழந்தைகள். இப்படிப்பட்ட இடத்திற்கு வந்து அங்குள்ள குழந்தைகளை படிக்க வைப்பதற்காக தனுஷ் எடுக்கும் முயற்சிகள் என தெலுங்கு வாசத்துடன் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
காலங்காலமாக தனியார் பள்ளிகள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் துவங்கி பணம் வசூலித்து வருகிறார்கள். இதோடு தற்போது நீட் தேர்வையும் சேர்த்துக் கொண்டு நடுத்தர மக்களை குறிவைத்து பணத்தை வசூலிக்கிறார்கள். இதனை எதிர்த்து கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என போராடும் ஆசிரியராக தனுஷ் வித்தியாசமாக நடித்திருக்கிறார். தனியார் பள்ளியின் தாளாளராக சமுத்திரக்கனி தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சக ஆசிரியராக சம்யுக்தா, ஊர் தலைவராக சாய் குமார், மாட்டு வண்டிக்காரராக பாரதிராஜா, மாணவராக கருணாஸின் மகன் ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை 1999 காலகட்டத்தில் நடைபெற்றதாக காட்சிகள் அமைத்துள்ளனர். இது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களுக்கு உகந்த கதையாக இருக்குமே தவிர, தமிழகத்திற்கு உகந்த கதையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் தமிழகம் கல்வியில் எவ்வளவோ மாற்றங்களை கண்டுள்ளது.