இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆண்ட்ராய்டு போன்.!.? “பகாசூரன்” திரை விமர்சனம்
இயக்குனர் செல்வராகவன், நட்டி நடராஜ், ராதாரவி, தேவதர்ஷினி நடிப்பில், ஜி.எம்.பிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பகாசூரன்”.
கதைப்படி… சிவ பக்தனாக அறிமுகமாகும் பீமராசு ( செல்வராகவன் ) தீராத கொலை வெறியோடு காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணிடம் தனியாக இருக்க முயன்றவரை கொடூரமாக கொலை செய்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார். பின்னர் கல்லூரியில் காவலாளியாக இருக்கும் ஒருவர், கல்லூரியின் பெண் வார்டன் என அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.
இதற்கிடையில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியான அருள் வர்மன் ( நட்டி நடராஜ் ) யூடியூப் சேனல் நடத்தி குற்றங்களையும், அதன் பின்னனியையும் வீடியோக்களாக வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரபலமாகிறார். அதேபோல் ஒரு வீடியோ பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்கிறார். அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது. பெண் ஆய்வாளர் தேவதர்ஷினி உதவியோடு குற்றவாளிகளை கண்டறியும் முனைப்புடன் விசாரணையில் இறங்குகிறார்.
பீமராசு ஏன் ஒவ்வொருவராக தேடிச்சென்று வெறித்தனமாக கொலை செய்கிறார், அதன் பின்னனி என்ன ? அருள் வர்மன் அண்ணன் மகள் மரணத்திற்கான காரணம் என்ன ? குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா ? அவரது விசாரணையில் அவருக்கு கிடைத்த தகவல்கள் என்ன என்பது மீதிக்கதை…..
அறிவியல் வளர்ச்சியால் தற்போது அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். அதில் உள்ள டேட்டிங் ஆப்களால் ஏற்படும் ஆபத்துகளை இளம்பிள்ளைகளிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு திரைக்கதை அமைத்து, அற்புதமான வசனங்களோடு இயக்கியுள்ள மோகன்.ஜி யை பாராட்டாமல் இருக்க முடியாது.
அதேபோல் செல்வராகவன் பொறுப்புள்ள தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகளை நினைத்து பொங்கி அழும் காட்சிகளில் அனைவரையும் கண்களங்க வைத்துள்ளார். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான நேரத்தில் சரியான படத்தை கொடுத்துள்ள படக்குழுவினர் அனைவருக்கும் நாற்காலி செய்தி குழுமத்தின் சார்பில் பாராட்டுக்கள்.