“ஆற்றல்” திரைவிமர்சனம்
கார் மெக்கானிக் செட் வைத்திருக்கும் சார்லியின் மகன் விதார்த். விபத்து இல்லாத கார் ஒன்றை தயாரிக்க விரும்புகிறார் விதார்த். அதற்கு பத்து லட்சம் பணம் தேவைப்படும் என தனது விருப்பத்தை தந்தை சார்லியிடம் தெரிவிக்கிறார். தனது மகனின் லட்சியம், ஆசை, கனவுகளை நிறைவேற்றுவதற்காக பொறுப்புள்ள தந்தையாக, பைனான்ஸியர் ஒருவரிடம் கடன் வாங்கிக்கொண்டு தனது மெக்கானிக் செட்டிற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து விட்டிற்கு வரும் வழியில் சாலையில் தனது இருசக்கர வாகனத்துடன் இறந்து கிடக்கிறார். அதன் பிறகு விதார்த் பைக்கில் செல்லும் போது நான்கு பேர் கொண்ட கும்பல் தலையில் கெல்மட் அணிந்து கொண்டு பெரியவர் ஒருவரை விபத்து ஏற்படுத்தி கீழே விழந்ததும் அவரிடமிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அவர்களை விரட்டிக் சென்று பணத்தை மீட்கிறார் விதார்த். இதேபோல் தான் தனது தந்தை சார்லியும் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் விதார்திற்கு எழுகிறது.
இதற்கிடையில் விதார்த், ஷிரிதா ராவ் இருவருக்குமிடையே காதல் ஏற்படுகிறது. தனது தந்தை மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வேலைகளில் இறங்குகிறார் விதார்த். சார்லி எவ்வாறு இறந்தார் ? தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தாரா விதார்த் ? விபத்து நடைபெறாத காரை உருவாக்க வேண்டும் என்கிற விதார்த் -ன் லட்சியம் நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை….
பெரும்பாலும் விதார்த் கதையை தேர்வு செய்யும் போதே அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி, படப்பிடிப்பில் கதாப்பாத்திமாகவே வாழ்ந்துவிடுவார், ஆனால் இந்தப் படத்தில் விதார்த்தின் நடிப்பு பேசும்படி யாக அமையவில்லை. சமூகத்தில் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி திருட்டு சம்பவங்களை அரங்கேற்றும் கொள்ளைக் கும்பல் பற்றிய கதையை தேர்வு செய்த இயக்குனர், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி விறுவிறுப்பாக கதையை நகர்த்தியிருக்கலாம்.
பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உணவுகளை வெளியில் ஆர்டர் செய்துதான் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். உணவுப் பொருட்களை கொண்டுவரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதித்தால் ஏற்படும் பின்விளைவுகளை அற்புதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.