சென்னையில் “தி கார்னர் சீட்ஸ்” நிறுவனம் சார்பில் சர்வதேச திரைப்பட விழா !
“தி கார்னர் சீட்ஸ்” நிறுவனத்தின் சார்பில் சர்வதேச திரைப்பட விழா தனியார் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த சாம்பவான்களான இயக்குனர் வி.சேகர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், இசையமைப்பாளர் வித்யா சாகர், படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சர்வதேச திரைப்பட விழா என்பது சினிமாவைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், ஒரு சில திரைத்துறையினருக்கும் & மாணவர்களுக்கும் மட்டுமே எளிதில் தெரிவதாகவும், அதிகம் அறியப்படுவதாகவும் இருக்கிறது. அதைமாற்றி சினிமாவை விரும்பும் கடை கோடி மாணவர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும், கனவுகளோடு பயணிக்கும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், மற்றும் ஏனைய திரைத்துறையினர்களுக்கும் எளிதில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த ‘தி கார்னர் சீட்ஸ் ‘ சர்வதேச திரைப்பட விழா உருவாக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 153 நாடுகளில் இருந்து படைப்புகள் சமர்ப்பிக்கப் படுகிறது. கலைத்துறையை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் தேடிச்சென்று அவர்களை இதில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் தனபாலன் கலை அறிவியல் கல்லூரி சென்னை, ( Dhanapalan , College of Science and Management, Chennai ) மற்றும் ஏ.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி சேலம் ( AVS College of Arts And Science, Salem )உதவியோடு அணைத்து கல்லூரிகளையும் பங்கேற்க வைக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திரைப்படம், ஆவணப்படம், திரைக்கதை தொகுப்பு, மொபைல் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று மொத்தம் 41 பிரிவுகளில் உங்கள் படைப்புகளை Filmfreeway இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 4. திரைப்பட திரையிடல் மற்றும் விருது விழா ஏப்ரல் 20 ம் தேதியில் நடைபெற இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து ‘தி கார்னர் சீட்ஸ்” சர்வதேச திரைப்பட துவக்க விழா சிறப்பாக நடைபெற்றதற்கு மக்கள் தொடர்பாளர், கலைமாமணி நெல்லை சுந்தராஜன், வீ எண்டர்டெயின்மெண்ட் விஜி ஆன்டனி ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்திய திரைப்படங்கள் உலக திரைப்பட விருதுகளை நோக்கி படையெடுப்பதைப்போல், உலக திரைப்படங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க வைப்பதை கௌரவமாக கருதவைப்பதே …. தங்கள் நோக்கம் …. என்று அதன் நிறுவனர்கள் சபரிநாதன் முத்துபாண்டியன் , MM தனா, ராஜேஷ் கண்ணா, ராகுல் ராஜேந்திரன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.