குடும்ப உறவுகளின் உணர்வை…. சமுத்திரக்கனி..! “தலைக்கூத்தல்” விமர்சனம்
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில், ஜெயபிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தலைக்கூத்தல்”.
கதைப்படி…. உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையில், சுய நினைவில்லாமல் இருந்து வரும் தனது தந்தையை கவனித்து வருகிறார் சமுத்திரக்கனி. இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்துக் கொண்டு, பகலில் தந்தையின் படுக்கையை சுத்தம் செய்து அவரைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்ததோடு தனது முழுக் கவனத்தையும் தந்தையை பராமரிப்பதிலேயை செலுத்துவதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் தந்தை மீதும் தாத்தா மீதும் அன்பாக இருக்கிறாள்.
குடும்பம் நடத்துவதற்கு போதுமான வருமானம் இல்லாததால் சமுத்திரக்கனி கடன் வாங்கி தந்தையை பராமரிக்க செலவு செய்கிறார். ஆகையால் அவரது மனைவி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கிறார். இரவில் கணவனும், பகலில் மனைவியும் வேலைக்குச் செல்வதால், இருவருக்குமான குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டு தினசரி வாக்குவாதம் செய்கிறார் சமுத்திரக்கனி யின் மனைவி.
தனது தந்தை கண்விழித்து குணமாகி வருவார் என்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் சமுத்திரக்கனி, ஊரின் எல்லையில் கோவிலுக்குச் சென்று குறி கேட்கிறார். அந்த கோவிலில் பூசாரியாக இருக்கும் வையாபுரி ( அரவானி ) கடா வெட்டி சோறு போடு உனது தந்தை கண்விழிப்பார் என குறி சொல்லி அனுப்புகிறார்.
சமுத்திரக்கனி யின் தந்தை கண்விழித்து எழுந்து வந்தாரா ? கனவன் மனைவி பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன ? என்பது மீதிக்கதை…..
தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில், நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முதியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களுக்கு தலைக்கு ஊத்தி மேலோகத்திற்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்து வந்தது.
இதை அடிப்படையாக வைத்து, குடும்ப உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக திரைக்கதையை அமைத்து, கனவன், மனைவி வாக்குவாதம், தந்தை, மகன் பாசம், மகள் தந்தை, தாத்தா மீது வைத்துள்ள பாசம் என படம் பார்க்கும் அனைவரையும் அவரவர் குடும்பங்களை நினைக்க வைத்துள்ளார் இயக்குனர்.
இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். படுக்கையில் தானாக போன தந்தையின் பீ, மூத்திரத்தை சுத்தம் செய்வதோடு, அவரைத் தூக்கிக் குளிப்பாட்டி அவருக்கு பவுடர் பூசி, ஆடைகள் அணிவித்து பார்த்துக் கொள்வது, மனைவியை கட்டிப்பிடிக்கும் போது அவள் மறுத்ததும் ஓடிப் போய் குளிப்பது, மாமனார் மைத்துனரிடம் தந்தையை விட்டுக்கொடுக்காமல் பேசுவது என சமுத்திரக்கனி யின் இயல்பான நடிப்பை கூறிக்கொண்டே போகலாம்…
கதிர், வசுந்தரா இருவருக்குமான காதல் காட்சிகள் மிகவும் இயல்பாக இருந்தது. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.
படம் பார்க்கும் போது.. ஒவ்வொரு காட்சியும் கிராமங்களில் நாம் பார்த்த, கேள்விப்பட்ட, ஊரில் நடந்த சம்பவங்கள்தான் நினைவிற்கு வருகிறது.