அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க வினர் மீது வழக்குப்பதிவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 25 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. பல்லடம் புறவழிச்சாலை திட்டம் கடந்த 2017 ஆம் ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. காளிவேலம்பட்டி பிரிவில் தொடங்கி மாணிக்காபுரம் ரோடு, மங்கலம் ரோடு, திருப்பூர் ரோடு, கணபதிபாளையம் வழியாக மாதப்பூர் வரை செல்லும் வகையில் புறவழிச்சாலைத்திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பல்லடத்தில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசல் பெருமளவில் குறையும். 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கிய நிலையில், திடீரென கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் சமீப காலங்களில் பல்லடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதியுறும் நிலையில் புறவழிச்சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி பாஜக சார்பில் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன், சின்னசாமி, நகர தலைவர் வடிவேல், ஜோதிமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனிடையே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென வருகை தந்தார். பின்னர் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில் போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக பாஜக பல்லடம் நகரத்தலைவர் வடிவேல், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட 130 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் மீது பல்லடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.