கவனிக்கப்படாத இலவச கழிப்பறைகள்… ஒப்பந்த முறைகேடு… நடவடிக்கை எடுக்கப்படுமா..?
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 57வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 11 இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகளை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ராதாகிருஷ்ணன் என்பவர் ஓப்பந்தம் எடுத்திருக்கிறார். ஆனால் ஒப்பந்தம் விட்டு பல மாதங்களாகியும் எந்தவித பணிகளும் சரிவர நடைபெறவில்லை எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்கள் சிரமப்படுவதாக அப்பகுதியில் புலம்புகின்றனர்.
இதுசம்பந்தமாக விசாரித்தபோது, இந்த வார்டில் பண்ணாரிஅம்மன் நகரில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பு பணிக்காக ரூபாய் 7 லட்சமும், காமராஜர் நகரில் உள்ள கழிப்பறைக்கு பராமரிப்பு பணிக்காக 5 லட்சமும் நிதி ஒதுக்கியிருக்கிறது கோவை மாநகராட்சி. ஆனால் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஆறுமாத காலமாக முறையான பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் வெறும் சுண்ணாம்பு மட்டும் அடித்து புதுப்பித்தது போல் அதிகாரிகளிடம் காண்பித்து பராமரிப்பு பணிக்கான மொத்த தொகையையும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பெற்றுள்ளாராம். பணிகள் முடிவடைந்ததா என அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யாமல் ஒப்பந்ததாரரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முழுத்தொகையையும் கொடுத்துள்ளனர்.
பணிகள் முடிந்ததாக கூறப்படும் கழிப்பறைகளில் பிளம்பர் வேலை எதுவும் நடைபெறாததால் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுசம்பந்தமாக ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டால் எதுவாக இருந்தாலும் உங்கள் கவுன்சிலர் சாந்தாமணியை கேளுங்கள் என்கிறார். கிழக்கு மண்டலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை இவர்களது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டு பொதுமக்களை சிரமப்படுத்துகிறார்கள் என அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
இதுசம்பந்தமாக முறையான விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கழிப்பறையை சரிசெய்து கொடுப்பார்களா கோவை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் என கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா கோவை மாநகராட்சி அதிகாரிகள்? காத்திருப்போம்.
– பாபு