தமிழகம்

குடிசைத் தொழில் போல் நடைபெறும் “விருதுகள்” வழங்கும் விழாக்கள் ! “தமிழ் இலக்கிய தோட்டம்” விருது வழங்கும் விழாவில் பிரபல எழுத்தாளர் பேச்சு !

இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ விருது. தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டு உறவில் இயங்கி வருகிறது. இது உலகமெங்கும் பரந்து இருக்கும் தமிழை வளர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும். கனடா அரசால் பதிவு செய்யப்பட்ட ஒரே தமிழ் இலக்கிய அறக்கட்டளை இதுவாகும்.

அரிய தமிழ் நூல்களை மீண்டும் பதிப்பித்தல், தமிழ் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்குதல், தமிழ்ப் பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கு செய்தல், கனடா நாட்டு  நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ் நூல்களை அளித்தல்  போன்ற சேவைகள் இதன் முக்கிய முன்னெடுப்புகளாகும்.

அமைப்பாகத் தோன்றி இயக்கமாக வளர்ந்திருக்கும் இந்த ‘கனடா இலக்கியத் தோட்டம்’  மூலம் ஆண்டு தோறும் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள். இயல் விருது என்ற பெயரில் இந்த விருது வழங்கப்படும் .இது பாராட்டுக் கேடயத்துடன் 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. 2023-க்கான விருது ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். -க்கு வழங்கப்படுகிறது. அவரது வாழ்நாள் சாதனைக்காக இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. ஓர் ஆய்வாளராக அவர் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிச் செய்திருக்கும்  ஆய்வு, வரலாற்று ஆய்வு நோக்கில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

புனைவு, அல்புனைவு, கவிதை, தமிழ்த் தகவல் தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டாலர் புலமைப் பரிசில்  என்கிற பெயரில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் அறிஞர்களின் விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. அத்துடன் மறக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள நாட்டுக் கூத்து போன்ற பாரம்பரியத் தொல் கலைகளை மீட்டுப் புத்தாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

டாக்டர் விஜய் ஜானகிராமன், பேராசிரியர் ஏ.ஜெ.வி. சந்திரகாந்தன், வழக்கறிஞர் மேனுவல் ஏசுதாசன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் என்.கே. மகாலிங்கம், எழுத்தாளர், இதழாசிரியர் செல்வம் அருளானந்தம், ஆலோசகர் உஷா மதிவாணன், இயக்குநர் திருமூர்த்தி ரங்கநாதன், இயக்குநர் சிவன் இளங்கோ, செயலாளர் ராஜா மகேந்திரன்,  எஸ்.கே. ராம் பிரசாந்த் ஆகியோர் அமைப்பின் புரவலர், இயக்குநர், செயல்பாட்டாளர்கள் என்று தூண்களாக இயங்கி வருகிறார்கள்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருதினை இதுவரை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், கவிஞர், மொழி ஆய்வாளர், கல்வியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பெற்றுள்ளார்கள்.

அந்தப் பட்டியல், 2001-ல் சுந்தர ராமசாமி தொடங்கி மணிக்கொடி காலத்து கே. கணேஷ், இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜார்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம் ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ் பொன்னுத்துரை,எஸ் ராமகிருஷ்ணன் நாஞ்சில்நாடன், டொமினிக் ஜீவா, தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன் , இ.மயூரநாதன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம், ஆ.இரா.வெங்கடாசலபதி, பாவண்ணன், லெ. முருகபூபதி  என நீள்கிறது .

2024 அக்டோபர் 20-ல் இவ்விருது விழா டொரொண்டோ நகரில் நடைபெற்றது. விழாவை அமைப்பின் புரவலர்களில் ஒருவரான ஏ.ஜே.வி சந்திரகாந்தன் தொடங்கி வைத்தார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவர் மேனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையாற்றினார். தமிழ் இலக்கியத் தோட்ட புரவலர்களில் ஒருவரும் ஹார்ட்வேர்ட்  பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடக்கி வைத்தவருமான டாக்டர் ஜானகிராமன் சிற்றுரையாற்றினார்.

அதன் பிறகு விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறின. இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது ஆர் .பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் க்கு வழங்கப்பட்டது. படைப்புக்கான புனைவு விருதை ஏ.எம். றஷ்மி சற்றே பெரிய கதைகளின் புத்தகம் படைப்புக்காகவும்,
அல்புனைவுக்கான விருதை பி.வி. விக்னேஸ்வரன் தனது நினைவு நல்லது படைப்புக்காகவும், கவிதைக்காக இளவாலை விஜயேந்திரன் தனது எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது? நூலுக்காகவும், மொழியாக்கத்துக்காக ஜெகதீஷ் குமார் கேசவன் எ ஜனி த்ரோ வோர்ட்ஸ் (A Journey Through words ) நூலுக்காகவும், பார்வதி கந்தசாமி இலக்கியம் மற்றும் சமூகப் பணிச்சாதனைக்கான சிறப்பு அங்கீகாரத்துக்காகவும்   பெற்றனர்.

கனடாவில் வாழும் கவிஞரும் பெரிதும் அறியப்பட்ட ஊடகவியலாளரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகளுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? அதற்கு என்ன மாண்பு இருக்கிறது? அதன் பின்னணியைச் சற்று நான் விளக்க வேண்டும். எல்லோருக்கும் தெரியும். இப்போது  விருதுகள் வழங்குவது, பட்டங்கள் வழங்குவது எல்லாம் இன்று குடிசைத் தொழில் போல் மாறிவிட்டன. யார் வேண்டுமானாலும் விருது வழங்கலாம் என்ற நிலை இருக்கிறது. அத்தகைய எல்லா விருதுகளையும் ‘கிணற்றுத் தவளை விருதுகள்’ என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் கிணற்றுத் தவளைகளுக்குத் தனது கிணற்றை விட வேறு உலகம் தெரியாது. அவர்கள் தங்கள் நாட்டை வைத்து, ஊரை வைத்து, கிராமத்தை வைத்து விருது கொடுக்கலாம். ஆனால், தமிழ் என்பது இப்போது ஒரு நாட்டினுடைய எல்லைப் பரப்பில் குறுகிவிடக் கூடிய ஒரு மொழி அல்ல. தமிழ் என்பது நிலம் கடந்த மொழி. அந்த மொழியால் அமைந்தது தான் தமிழ்ப் பண்பாடும் வாழ்வும். இந்த விருது மட்டும்தான் உலகத் தமிழ் விருதாக இருக்கிறது. சரியான தீர்க்கமான தெளிவான பார்வையோடு வழங்கப்படுகிற இந்த விருதுதான் பெருமைக்குரியது என்றார்.
.
இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். -க்கு வழங்கப்பட்டது.. விருதாளருக்கான மதிப்புரை வாசிக்கப்பட்டது. விருதை பெற்ற  பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்கிற ஊரில் பிறந்தவர், தமிழ் ஒரு மாநிலத்தின் மொழி அல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி ‘என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம் ‘என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். திராவிட மொழியியலையும் சிந்து சமவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளை உருவாக்கியவர் இவர்’ என்று சிந்து சமவெளி ஆய்வாளர் ஐராவதம் மகா தேவனால் குறிப்பிடப்பட்டவர்.

விருதைப் பெற்றுக் கொண்டு ஆர். பாலகிருஷ்ணன் பேசும்போது, நிறைவால் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது என் நெஞ்சம். நான் என்றும் ஒரு தமிழ் மாணவன். அதுதான் எனது அடிப்படை அடையாளம். தமிழ் தான் எனது முகம். தமிழ் தான் எனது முகவரி. தமிழ் தான் எனது முகவரிச்சீட்டு. தமிழ் நெடுஞ்சாலையின் எண்ணற்ற பயணிகளில் நானும் ஒருவன். இந்த தமிழ் நெடுஞ்சாலையில் நான் செய்து வரும் பயணத்தின் திசையை, நோக்கத்தை,  எதிர்பாராத திருப்பங்களை, அதன் சில விளைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இந்த ஏற்புரையை ஏற்புடையதாக்கும் என்று நான் நம்புகிறேன். பிடித்ததை விட மாட்டேன், பிடிக்காததைத் தொட மாட்டேன் என்ற என் இயல்புதான் தமிழின்பால் என்னை ஆற்றுப்படுத்தியது. எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கியத்தை தான் நேசித்துப் படித்தேன். தமிழை மட்டுமே பற்றிக் கொண்டு என்னளவில் நான் பயமின்றி இருந்தேன். தமிழ் இலக்கியம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று என்னைச் சுற்றி நின்று அச்சுறுத்தினார்கள். ஆனால் நான் எனது முதுகலைத் தேர்வு முடிவுகள் வருவதற்கு 30 நாட்கள் முன்னதாகவே மதுரை தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

நான் எனது வாழ்க்கையில் எழுதிய ஒரே ஒரு தேர்வு இந்திய குடிமைப்பணி தேர்வு மட்டுமே. அதையும் முதன் முறையாக தமிழில் எழுதினேன். அதையும் முதல் முயற்சியிலேயே எழுதி வெற்றி கண்டது என்பது எனது வாழ்நாள் பெருமிதம். ஆனாலும் தமிழ்நாட்டில் தான் என்னைப் பணியமர்த்த வேண்டும் என்ற சலுகை கேட்காமல் 1984-ல்  தமிழ்நாட்டை விட்டு ஒடிசா சென்றேன். 34 ஆண்டுகள் ஒடிசா மாநில அரசிலும் டெல்லியில் இந்திய துணைத்தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி 2018-ல் ஓய்வு பெற்றேன். ஒய்வுக்குப் பின்னரும் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்டு இறுதியாக இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்தேன். நேற்று போல் இருக்கிறது ஆனால் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன.

நான் எழுதிவிட்ட நூல்கள் முகப்பு அட்டையில்  என் பெயருக்கு எந்த முன்னொட்டும், குறிப்பாக ஐஏஎஸ் என்ற பின்னொட்டும் இல்லாதவாறு கவனமாகப் பார்த்துக் கொண்டேன். ஆனாலும் இந்திய ஆட்சிப் பணியை நான் நெஞ்சார விரும்புகிறேன். காலம் எனக்கு அளித்த வாய்ப்பு அது. உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஏராளமான நாடுகளுக்கும் இந்தியாவில் 97 விழுக்காடு மாவட்டங்களுக்கும் ஆட்சிப் பணியே என்னை அழைத்துச் சென்றது. தமிழ் நெடுஞ்சாலையில் எனது நெடிய ஆய்வுப் பணியையும் கவனக்குவிப்பையும் அதுவே சாத்தியப்படுத்தியது. ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகி விடு என்று என்னை நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் பெருந்தலைவர்  காமராஜர். அப்போது எனக்கு வயது 15 கூட ஆகி இருக்கவில்லை.
இப்போது நினைத்தாலும் என்னை நெகிழ வைக்கிறது பெருந்தலைவருடன் நான் சென்ற அந்த நள்ளிரவுக் கார்ப் பயணம்  என்று பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button