சென்னையில் பிரபல ரவுடி கஞ்சாவுடன் கைது !

சென்னை தலைமைச் செயலகம் அருகிலுள்ள எஸ் வி எம் நகர் குடியிருப்பு பகுதியில், ஜீ-5 காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜா ரோந்துப் பணியில் இருந்தபோது, அப்பகுதி இளைஞர் ஒருவர் 1.500 கிலோ கிராம் கஞ்சாவுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைச் செயலகம் குடியிருப்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எஸ் வி எம் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜா ரோந்துப் பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குப்பை கிடங்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞனைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஒன்றரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணை செய்ததில் சரித்திர பதிவேடு குற்றவாளியான மாணிக்கம் என்பதும், வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
பின்னர் ஜீ-5 காவல் நிலைய ஆய்வாளர் தாம்சன் சேவியர் ( குற்ற எண் : 381/ 2025 U/S 8 ( c ) R/W 20 ( B ) (11) B, 29 (1) 25 NDPS Act ) ன் படி வழக்குப்பதிவு செய்ததோடு , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளார்.
– கே.எம்.எஸ்




