பல்லடம் அருகே 90 வயதிலும் துயரத்தில் வாடும் துப்புறவு தொழிலாளி ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஏடி காலனியில் வசித்து வருபவர் 90 வயதான சின்னான். கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு தொழிலாளியாக மாத சம்பளமாக 2000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் சின்னானின் மனைவி கருப்பாள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார், தொடர்ச்சியாக மகள் தங்காளும் இறந்துவிடவே தனது 90 வது வயதில் தனி மரமாக தொகுப்பு வீட்டில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ள சின்னானுக்கு ஓய்வூதிய தொகையோ, ரேசன் கடையில் பொருட்களோ கிடைப்பதில்லை. தற்போது வரை சீருடை சட்டை ஒன்றை மட்டுமே துவைத்து பயன்படுத்தி வருவது வேதனைக்குறியது. மேலும் சின்னான் வசித்து வரும் தொகுப்பு வீடு சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
துப்புறவு தொழிலாளி சின்னான் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காலத்தை கழித்துவருகிறார். ரேகை சரியாக பதிவாகாததால் ரேசன் பொருட்கள் கிடைப்பதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் குடியிருந்து வரும் வீடோ இடிந்து விழும் நிலையில் உள்ளது. நாகரீக உலகில் இன்றும் விறகடுப்பை பயன்படுத்தி வருகிறார்.
மேலும் 30 ஆண்டுகாலமாக ஊரை தூய்மைப்படுத்திய துப்புறவு தொழிலாளி சின்னான் தனது 90 வயதில் துயரத்தை அனுபவித்து வருகிறார். கல் நெஞ்சம் படைத்த கரைப்புதூர் ஊராட்சியில் தனது 90 வது வயதில் துன்பத்தை அனுபவித்து வரும் துப்புறவு தொழிலாளியின் துயரத்தை போக்க ஓய்வூதியம் வழங்கவும், ரேசன் பொருட்கள் வழங்கிடவும் ஆவண செய்வதோடு ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீட்டை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, 90 வயது துப்புறவு தொழிலாளியின் நிம்மதியான வாழ்க்கைக்கு தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..