அழகு நிலைய பெண் பிரவினா மீண்டும் சிறைப்பறவை ஆனார், பலகோடி மோசடி வழக்கில் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அடங்கியயிருந்த நிலையில் ஈரோட்டில் மேலும் ஒரு மோசடி வழக்கில் பல்லடத்தை சேர்ந்த அழகு நிலைய பெண் பிரவீனாவை (41) ஈரோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்குமுன் பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிவக்குமார் (43), சகோதரர் விஜயகுமார் (41) சகோதரரின் மகன் ராகுல் பாலாஜி (19), அழகு நிலையம் நடத்திவந்த ராமச்சந்திரன் மகள் பிரவினா (41) ஆகியோர் கோவை திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்பாவிகளை குறி வைத்து கோடிக்கணக்கில் நூதன முறையில் மோசடி செய்து தப்பி ஓடி ஒளிவதும் போலீசார் பிடித்து சிறையில் அடைப்பதும் வாடிக்கையாகியுள்ளது.
மோசடியின் மூளையாக செயல்பட்ட சிவக்குமார் முதலில் சொத்துக்களை வைத்து கடன் தேவைப்படுவோரின் விபரங்களை தரகர்கள் மூலம் தெரிந்துகொண்டு தொழில் துவங்கி பங்குதாரர்களாக்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஆசை வார்த்தை கூறி தனது வலையில் விழவைத்துவிடுவது வழக்கம். பின்னர் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து பதிவில்லா பங்குதாரர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே வங்கிக்கணக்கில் இருந்து கடனாக பெற்ற தொகையை வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றி மோசடியாக பணத்தை அபகரித்துவிட்டு பின்னர் ஒரு தவணை கூட செலுத்தாமல் ஏமாற்றிவிடுவார்.
சொத்துப்பத்திரத்தை கொடுத்தவர்கள் மாதா மாதம் பங்குப்பணம் கொட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தால் கடைசியில் வங்கி ஜப்தி நோட்டீஸ் வந்த பிறகு தான் தாங்கள் மோசடி செய்யப்பட்ட விபரமே தெரிய வரும். பின்னர் சிவக்குமாரை தேடினால் எஸ்கேப் தான். ஆரம்ப கால கட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளர் ஒருவரின் துணையுடன் இது போன்ற மோசடி வேலையை துவங்கியபோது மேலாளரின் நடவடிக்கைகக் குறித்து விசாரணை மேற்கொண்ட வங்கி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது.
பின்னர் கோவையில் பிரமாண்டமாக அலுவலகத்தை துவங்கிய சிவக்குமாருக்கு பல்லடத்தை சேர்ந்த அழகு நிலைய பெண் பிரவினாவின் தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு பிரவினாவை பயன்படுத்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் சொத்துப்பத்திரத்தை பெற்று மோசடியாக ரூபாய் 2 கோடியும், திருப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 4 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்து 528 ம், கோவையை சேர்ந்த சத்யமூர்த்தி என்பவரிடம் 55 லட்சமும், ஊத்துகுளியை சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 1 கோடியே 75 லட்சமும், ஊத்துகுளியை சேர்ந்த சந்திரகலா என்பவரிடம் 1 கோடியே 50 லட்சமும், திருப்பூர் ரத்தினசாமி என்பவரிடம் கோடிக்கணக்கிலான மதிப்பிலான பத்திரம் மற்றும் ரொக்கம் ரூ. 10 லட்சத்து 75 ஆயிரமும் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள மோசடியில் குமரேசன் மற்றும் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரேசனின் புகாரின் பேரில் சிவக்குமார் மற்றும் பிரவினாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த இருவரும் தன்னை மிரட்டுவதாக குமரேசன் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் பேரில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிரவினா மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருப்பூர் ரத்தினசாமியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊத்துகுளியை சேர்ந்த பெரியசாமி, சந்திரகலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பிரவினா, சிவக்குமார், விஜயகுமார், ராகுல்பாலாஜி, சரவணன் ஆகியோரை தேடிவருவதோடு சம்பந்தப்பட்டவர்களின் வீட்டின் கதவுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. பின்னர் திருப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிவக்குமார், ஆடிட்டர் சரவணன், ஜெகநாதன், விஜயகுமார், ராகுல்பாலாஜி, பிரபு, வங்கி மேலாளர் மதன் மோகன் ஆகிய 7 பேர் மீது திருப்பூர் மாநகர காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் குமரேசன் கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தமிழரசன் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் அவரது மகள் மாதரசியும் அடுத்தடுத்து தறகொலை செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன. இந்நிலையில். திருச்சியில் பதுங்கியிருந்த பிரவீனா பல்லடம் வந்த போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிவக்குமாரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த பிரவீனா பல்லடம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இதனிடையே ஈரோட்டில் பெருந்துறை சரளையை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் தன்னிடம் தொழில் துவங்குவதாக கூறி ரூபாய் 1 கோடியே ஐம்பது லட்சம் மோசடி செய்ததாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததன் பேரில் தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பிரவீனாவை அழைத்து விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர். பீனிக்ஸ் பறவையாக வாழ வேண்டிய பெண் கூடா நட்பினால் சிறைப்பறவையாக மீண்டும் பிரவீனா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்து சொத்தை பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உடனடியாக மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார், பிரவீனா, விஜயகுமார் உள்ளிட்ட மோசடி பேர்வழிகளின் சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரவீனாவின் பின்புலம் குறித்தும் மோசடி செய்த பணம் யாரிடம் கைமாறியது என்பது குறித்தும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதோடு மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கி தரவேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.