கலப்பட டீசல் கடத்திய டேங்கர் லாரிகள் பறிமுதல் ! கலக்கத்தில் கடத்தல் மாஃபியாக்கள் !

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில், சென்னை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் கோபாலகுரு தலைமையிலான, தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மாதர் பாக்கம் நெடுஞ்சாலையில் நாகராஜ் கண்டிகை என்ற இடத்தில், சந்தேகத்திற்கு இடமான ஊதாக்கலர் தகர செட்டில் டீசல் டேங்கர் வாகனங்கள் உள்ளேயும், வெளியேயும் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது டேங்கர் லாரியில் இருந்து மின் மோட்டார் மூலம் சிறிய வாகனங்களில் டீசலை நிரப்பிய வண்ணம் இருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, முதலில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என சோதனையில் ஈடுபட முயன்றதும், மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் குறைவான அளவில் டீசலை வாங்கிவந்து, கலப்பட டீசலை கலந்து, சிறிய டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் பங்கில் உள்ள மீட்டர் மூலம் விற்பனை செய்வதாகவும், தங்களின் முதலாளி அண்ணா நகரில் உள்ள பிரபாகரன் என்பவர் தான் இந்த இடத்தில் ஏபி பெட்ரோலியம் என்கிற பெயரில் கலப்பட டீசல் தொழில் செய்து வருகிறார் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் முறையான ஆவணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அந்த இடத்தில் இல்லை. மேலும் கலப்பட டீசல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று லாரிகளையும், 2200 லிட்டர் டீசலுடன் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் ஸ்பிரிட் கலப்பட டீசல் சட்ட விதிகளின்படி குற்ற எண் 236/ 2025 கீழ் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த ரவி, வேல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவான ஏபி பெட்ரோலியம் உரிமையாளர் அண்ணாநகர் பிரபாகரனை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் கலப்பட டீசல் தொழிலில் ஈடுபட்டுள்ள கடத்தல் பேர்வழிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த கலப்பட டீசல் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்த உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படையினரை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் ரூபேஷ்குமார் மீனா வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


