ஜனநாயகத்தை மீறி தமிழக போலீஸ் நடந்துள்ளது … : வசந்தகுமார் சபாநாயகரிடம் புகார்!
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதும் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட வசந்தகுமார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், வசந்தகுமார் எம்.பி. நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார்.“நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு நாகர்கோவில் வருவதற்காக பாளையங்கோட்டையிலிருந்து சேரன்மாதேவி, பணகுடி சாலையில் வரலாம் என்றிருந்தேன்.
நாங்குநேரி தொகுதியில் கலுங்கடி பக்கத்தில் வரும்போது போலீஸ் டி.எஸ்.பி. வலதுபக்கமாக திரும்பி பாளையங்கோட்டைக்குச் செல்லுங்கள் என்றார். திரும்பவும் வேனை எடுத்துவந்து முன்னால் வந்து என்னை போகவிடாமல் நிறுத்தினார். முன்னும் பின்னும் போகவிடாமல் தடுத்தார். யாரிடமோ தொடர்புகொண்டு உத்தரவு வாங்கினார்.
பின்னர் என்னை நாங்குநேரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு 4 மணி நேரத்துக்கும் மேலாக என்னை உட்காரவைத்தவர்கள், என் மீது வழக்கு போட்டதாகச் சொன்னார். எதற்கு என கேட்டதற்கு நான் பணம் விநியோகித்ததாகச் சொன்னார்கள். பணம் கொடுத்தேன் என்றால் பணத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டுமே. ஜனநாயகத்தை மீறி தமிழக போலீஸ் இப்படி நடந்துகொண்டது.
அ.தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இல்லாததால் வசந்தகுமாரை தடுத்து நிறுத்தி காங்கிரஸ் வெற்றியைத் தடுக்கலாம் என நினைத்தார்கள். எனது கைதால் ஆவேசமாக மக்கள் கை சின்னத்துக்கு வாக்களித்தனர். என்மீது தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த எப்.ஐ.ஆர். காப்பி வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும்.
என்னைக் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்தது குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்குத் தகவல் அளித்திருக்கிறேன். நாடாளுமன்ற குழு இனி இதுகுறித்து விசாரணை நடத்தும்“ என்றார்.