திருநங்கைக்கு பாலியல் சீண்டல் ! கோஷ்டி தகராறில் வெட்டுக்குத்து !

சென்னை தலைமைச் செயலகம் அருகேயுள்ள எஸ்.வி.எம் குடியிருப்பு பகுதியில் பிரசாந்த் என்கிற குள்ள கருப்பா என்பவரும் அறிவழகன் என்கிற கீதா திருநங்கை என்பவரும் காதலித்து திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு கார்த்திக் என்பவர் நண்பராக இருந்து வந்துள்ளார். பிரசாந்த் அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வருவது வழக்கம். அவ்வாறு சிறை செல்லும்போது கார்த்திக் திருநங்கையான கீதாவுக்கு பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் கார்த்திக் குடிபோதையில் திருநங்கை கீதாவை பாலியல் ரீதியாக சீண்டிய போது, இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் திருநங்கை கீதா ஜீ-5 காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் கார்த்திகை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனை கேள்விப்பட்ட பிரசாந்த் என்கிற குள்ள கருப்பா கார்த்திக் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளான். இதனையறிந்த கார்த்திக் சிறையிலிருந்து வெளியே வந்ததும் பிரசாந்த் மீது உள்ள பயத்தில் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளான்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் 8 பேர் கொண்ட கும்பல் கார்த்திகை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதில் மூன்று பேர் கார்த்திக் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த கார்த்திக் வீட்டிற்குள் சென்று பதுங்கியதால், வெளியில் இருந்த அவனது தந்தையை வெட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்ட ஜீ-5 காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக ஐந்து பேரை கைது செய்து ( ஒரு திருநங்கை உள்பட ) சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருந்து வந்த நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த விஜயன் மற்றும் யுகேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். யுகேஷ் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
– கே.எம்.எஸ்




