தமிழகம்

போராட்டத்திற்கு தயாராகும் மருத்துவர்கள்

மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் என்.ஐ.ஏ, உபா போன்ற முக்கிய மசோதாக்களை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது. அந்த வரிசையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதா (National Medical Commission Bill) ஒட்டுமொத்த மருத்துவக் கல்வி அமைப்பையும் கட்டுப்படுத்துவது எனக் கூறப்படுகிறது. ஆனால், தேசிய தேர்வுகள் வாரியத்தின் கீழ் வழங்கப்படும் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் வரம்பிற்குள் வரவில்லை.

நிதி ஆயோக், சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மற்றும் ரஞ்சித் ராய் சௌத்ரி குழு ஆகிய மூன்று தரப்புகளும் தேசிய மருத்துவ ஆணையத்துடன் தேசிய தேர்வுகள் வாரியத்தை இணைத்து, முதுநிலை மருத்துவக் கல்வியை கட்டுப்படுத்தும் வகையில் முதுகலை மருத்துவக் கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றன. இருப்பினும், தேசிய தேர்வுகள் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுவரும் சுமார் 8000 முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன. இவை அந்த கட்டுப்பாட்டில் வராமல் சுதந்திரமாகவே இருக்கப்போகின்றன.

நிதி ஆயோக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின் முதல் வரைவில், “தேசிய தேர்வுகள் வாரியம் (National Board of Examinations) முதுகலை மருத்துவக் கல்வி வாரியத்துடன் (Post-Graduate Medical Education Board) இணைக்கப்படும். முதுநிலை படிப்புகளுக்கான தரத்தை நிர்ணயம் செய்யும் முதுகலை மருத்துவக் கல்வி வாரியமே முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கும்“ எனக் கூறுகிறது.
2017ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, தேசிய தேர்வுகள் வாரியத்தை முதுகலை மருத்துவக் கல்வி வாரியத்துடன் இணைக்கும் அம்சம் கைவிடப்பட்டது. பின் அதே மசோதா சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது, அந்தக் குழுவின் அறிக்கையில் மீண்டும் தேசிய தேர்வுகள் வாரியத்தை இணைப்பது பரிந்துரைக்கப்பட்டது. “இந்தியாவில் எம்.டி. மற்றும் டி.என்.பி. பட்டப்படிப்புகளுக்கு இரண்டு அமைப்புகள் உள்ளன. தேசிய மருத்துவ ஆணைய மசோதா மூலம் தேசிய தேர்வுகள் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் எல்லா படிப்புகளும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.” என்று அதில் கூறிப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு டாக்டர் ரஞ்சித் ராய் சௌத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவும் இதையே பரிந்துரைத்திருந்தது.

தேசிய தேர்வுகள் வாரியத்தின் மூலம் முதுநிலை மருத்துவப் படிப்புகளை வழங்கும் முறையில், மருத்துவப் பயற்சி பெறும் மாணவர்களுக்கு மருத்துவமனைகளே சம்பளம் வழங்கும். இதனால், இந்த முறை பயற்சிக் கட்டணம் இல்லாமல் இலவசமாகவே பயற்சி பெறுவதற்கு இணையானது என்று நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் நடப்பதால், தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் கலந்தாய்வில் மருத்துவமனைகள் தலையிட்டு கட்டுப்படுத்த முடியாது, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் கேபிடேஷன் (capitation) கட்டணம் ஆகியவையும் இருக்காது, என்று கூறி தேசிய தேர்வுகள் வாரியத்தின் முறையையே அனைத்து முதுநிலை படிப்புகளிலும் பின்பற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

இதேபோலவே, மத்திய அரசு நாடாளுமன்ற நிலைக்குழுவிடமும் தேசிய தேர்வுகள் வாரியத்தை தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவரமால் இருப்பதே சரி எனவும் வாதிட்டுள்ளது. அதில் தேசிய தேர்வுகள் வாரியம் போன்ற அமைப்புகள் இந்த மசோதாவுக்கு வெளியே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
63 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-க்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்த்தபோதிலும், மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த மசோதாவின் படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதில் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். இந்த ஆணையத்திற்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்கு மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும். இதனால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
& நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button