விபத்துகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்! : கோவை இளைஞர்கள் அசத்தல்..!
கோவை மாநகரில் டிராபிக்கை குறைக்கும் வகையில் ‘உயிர்’ என்ற தன்னார்வ அமைப்பு இளைஞர்கள், போக்குவரத்து காவல்துறையுடன் கை கோர்த்து உள்ளனர். விதிகளை மீறுவோர்களை படம் பிடித்து, வீட்டிற்கே அபராத செலான் அனுப்பும் தொழில்நுட்பத்தை இந்த இளைஞர்கள் செயல்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒருவர் சாலை விபத்தில் பலியாகி வருகின்றனர். மலேரியா, டெங்கு, காலாரா போன்ற நோய் தாக்குதலினால் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்கள் தான் அதிகம். அதிலும், தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இந்த சூழலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும் ‘உயிர்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர், கோவையில் போக்குவரத்து காவல்துறையுடன் கைகோர்த்து பல உன்னத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கோவையில் முதற்கட்டமாக அவிநாசி சாலையில் உள்ள ஐந்து முக்கிய சிக்னலில் ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை உடனே அடையாளம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிக்னல் இருக்கும் போது நிற்காமல் செல்லுதல், எல்லைக் கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்துதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல் என போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை, அவர்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் படம் பிடிக்கிறது.
மேலும், அந்த நம்பர் பிளேட்டை வைத்து அவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட அத்தனை சுயவிபரங்களையும் சாப்ட்வேர் மூலம் உடனுக்குடன் வந்துவிடுகிறது. இதையடுத்து அந்த நபரின் வீட்டிற்கே அபராத செலான் அனுப்பபடுகிறது.
இது தொடர்பாக ‘உயிர்’ அமைப்பின் அறங்காவலர் ராஜசேகரன் பேசுகையில், ‘இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர். பலர் வாழ்நாள் முழுவதும் முடங்கி இருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
இதை கட்டுபடுத்தும் விதமாகவே ‘உயிர்’ என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளோம். இதே போல் கிஸீணீறீஷீரீ & ஞிவீரீவீtணீறீ லிணீதீs என்ற பெயரில் இளைஞர் படையும் உள்ளது. நாங்கள் கோவை போக்குவரத்து காவல்துறையுடன் கைகோர்த்து, முக்கிய இடங்களில் அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடி கேமராக்களை பொருத்தியுள்ளோம்’ என்றார்.
அப்படி என்ன புதிய தொழில்நுட்பம்? இந்தியாவின் மற்ற நகரங்களில் இல்லாத யுக்தியா கோவையில் உள்ளது என்று கேட்பவர்களுக்கு, ஆம், கோவையில் தான் முதன்முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் ‘அனலாக் & டிஜிட்டல் லேப்’ நிர்வாக இயக்குனர் ஷ்யாம்.
ஷ்யாம் கூறும் போது, ‘நான் பி.இ பட்டதாரி. படித்து விட்டு வேலைக்குச் சென்ற போது, படித்ததற்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் தான் கடந்த 2009ம் ஆண்டு அனலாக் & டிஜிட்டல் லேப் நிறுவனத்தை தொடங்கினேன். இப்படி இருக்கும் போது, ஒரு நாள் காந்திபுரத்தில் உள்ள ஜிபி சிக்னலில் நின்றிருந்தேன். அப்போது அங்கிருந்த போலீசார் சிக்னலை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் சிக்னலை கடந்து செல்வதற்கு அதிக நேரம் பிடித்தது.
இவ்வாறு சிக்னலில் அதிக நேரம் நிற்க வேண்டியிருந்தை பற்றி எண்ணினேன். அதற்கான தீர்வும் என்னிடம் இருந்தது. மறுநாளே காவல் ஆணையாளரைச் சந்தித்து, என்னுடைய தீர்வைச் சொன்னேன். அவருடைய உதவியால், எனக்கு இரண்டு சிக்னலை கொடுத்து எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்தார்கள்.
அப்போது சாலையை முழுவதுமாக ஆய்வு செய்து, பேரிகார்டு எங்கு வைக்க வேண்டும், எங்கு ஸ்பீடு பிரேக்கர் வைக்க வேண்டும் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் பக்குவமாய் செயல்படுத்தினோம். மேலும் குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில், க்ரீன் காரிடர் என்பதையும் அமல்படுத்தினோம். இதன் மூலம் உப்பிலிபாளையத்திலிருந்து கோவை ஏர்போர்ட்டுக்கு வெறும் 18 நிமிடங்களில் செல்ல முடியும்.
இதன் பிறகு சென்னை, மதுரை, ஹைதராபாத், அகமாதாபாத் என பல்வேறு நகரங்களிலும் டிராபிக்கை சரி செய்யும் முயற்சியில் இறங்கினோம். சென்னையில் தற்போது மெஷின் மூலம் ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படுகிறது. அந்த மெஷினை சென்னையில் அறிமுகம் செய்ததும் நாங்கள் தான்.
இப்போது ஸ்மார்ட் கேமரா தொழில்நுட்பத்தை கோவையில் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் கோவையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து விதிமீறல் பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கோவையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக போலீசாருக்கு உதவும் வகையில் பாடி கேமரா, கொண்டு வந்துள்ளோம். விரைவில் ஆம்புலன்ஸ்க்கு பயன்படும் வகையிலான ஆட்டோமெட்டிக் க்ரீன் சிக்னலையும் கொண்டு வருகிறோம்’. இவ்வாறு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
& சாகுல் ஹமீது