உன்னதமான உறவுகளின் மகத்துவத்தை உணர்த்தும் “மாமன்” விமர்சனம்

லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரிப்பில், சூரி, ஐஸ்வர்யலெட்சுமி, ராஜ்கிரண், சுவாஷிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், குமரன் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் “மாமன்”.
கதைப்படி.. இன்பாவின் ( சூரி ) அக்காவிற்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், அவரது மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் மலடி அது இதுவென பேசி ஏளனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்பாவின் அக்கா கிரிஷா ( சுவாஷிகா ) கற்பமாகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தை கொண்டாடுகின்றனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கிரிஷாவுடன், இன்பாவும் செல்கிறார். அங்கு இன்பா தனது அக்கா மீதுள்ள பாசத்தையும், குடும்ப உறவினர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் பார்த்து பூரிப்படைகிறார் உதவி மருத்துவராக பணிபுரியும் ரேகா ( ஐஸ்வர்யலெட்சுமி ). அதன் பிறகு கிரிஷாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சம்பிரதாயப்படி தாய் மாமன் முதலில் குழந்தையை பார்க்க கூடாது என உறவினர்கள் கூற, வேதனையுடன் இன்பா தனியாக இருக்கும்போது, அதைப்பற்றி நான்தானே கவலைப்பட வேண்டும், நீ போய் குழந்தையைப்பார் என தனது காதலை வெளிப்படுத்துகிறார் ரேகா.

பின்னர் குழந்தைமீது அதீத அன்பு செலுத்தி, ஓவியமாக செல்லமாக வளர்க்கிறார் இன்பா. அந்த ஊரில் மதிப்பு, மரியாதையிடன் வாழ்ந்துவரும் சிங்கராயர் ( ராஜ்கிரண் ), விஜி சந்திரசேகர் தம்பதியர் தலைமையில் தான் அனைத்து நல்லது, கெட்டது எல்லாம் நடைபெறும். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், இன்பா குடும்பத்தினர்தான் அவர்களுக்கு எல்லமே. இதற்கிடையில் இன்பா, ரேகா காதலும் வளர உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.

திருமணத்தில் தாலி கட்டுவது முதல், முதலிரவு வரை மாமானை பிரியாமல் அந்தப் பையனும் இருக்கிறான். ரேகாவும் குழந்தையின் பாசத்தை உணர்ந்து பொறுத்துக் கொள்கிறார். இதே நிலை பலநாட்கள் நீடிக்கிறது. இருவரும் ஹனிமூன் செல்ல தயாராகும்போது, அந்தப் பையனும் வருவேன் என பாசத்தால் அடம்பிடிக்க, ஹனிமூன் பயணமும் தடைபடுகிறது. இதனால் கோபமடைந்த ரேகா, இன்பாவிடம் சண்டைபோட, அக்கா குடும்பத்திற்கும், இன்பாவின் மனைவிக்குமான மன வருத்தம் பெரிதாகி, குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரிந்து செல்கிறார் ரேகா.
பின்னர் இன்பா, ரேகா தம்பதியர் மீண்டும் இணைந்தார்களா ? அக்காவிற்கும் மனைவிக்குமான பிரச்சினை தீர்ந்ததா ? அதன்பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை…

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்றாலே என்னவென்று தெரியாத இளம் தலைமுறையினருக்கு, உன்னதமான உறவுகளின் உண்மையை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்திய இயக்குநருக்கு பாராட்டுக்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் காட்சிகளோடு ஒன்றிப்போகும் அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.

தென் மாவட்டங்களில் தாய்மாமன் உறவு எவ்வளவு மகத்துவமானது, அந்த உறவின் மகத்துவத்தை உணந்ததாலோ என்னவோ, சூரி நடித்திருக்கிறார் என்பதைவிட, மாமனாக, அக்காவிற்கு தம்பியாக, அம்மாவிற்கு மகனாக, மருமகனாக, நண்பராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் ஐஸ்வர்யலெட்சுமியும் தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அக்கா கதாப்பாத்திரத்தில் சுவாஷிகா தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், பால சரவணன் உள்ளிட்டோர் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு அவரவர் காதாப்பாத்திரத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.