நேதாஜி மீது கை வைத்த ஹிட்லர் – அமைச்சர் நாசர் சுவாரஸ்யம்
நேதாஜி மீது கை வைத்த ஹிட்லர்; சுவாரஸ்ய கதை சொல்லி நடந்த ஆவடி மாநகராட்சி பதவியேற்பு விழா..
ஆவடி மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா இன்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.ஆவடி மாநகராட்சி ஆணையர் திருமதி ர. சரஸ்வதி விழா சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து 48 வார்டு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பதவியேற்றுக் கொண்டனர்.விழாவில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைக் கண்டு பயந்து தான் ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்றனர். ஒருமுறை நேதாஜி ஹிட்லரை சந்திப்பதற்காக ஜெர்மனி சென்ற போது, அங்கு ஹிட்லர் உருவம் போல் இருந்த பலர் நேதாஜி முன் வந்து சென்றுள்ளனர். அதில் எவரையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்திருக்கிறார் நேதாஜி. ஒருவர் மட்டும் நேதாஜியின் பின்னால் இருந்து தோளில் கைவைத்து “நான் யார் என்று கண்டுபிடியுங்கள்” என்று கூறியிருக்கிறார் ஒரு நபர். நேதாஜி சற்றும் யோசிக்காமல் ஹிட்லர் என்று கூறினாராம். உங்கள் கண்முன்னால் இத்தனை பேர் என் உருவம் கொண்டு பலர் உலாவிய போது என்னை பார்க்காமலேயே எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார் ஹிட்லர். அதற்கு நேதாஜி, “இந்த நேதாஜியின் தோள் மீது கைவைக்கும் தைரியம் ஹிட்லருக்கு மட்டுமே உண்டு” என்று கூறியிருக்கிறார்.
அப்படி ஒரு வீரனான நேதாஜி அவர்கள் மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதை நிர்வகிக்க முடியாமல் பாதியில் விட்டுச் சென்றிருக்கிறார். அப்படியான பதவி நீங்கள் ஏற்றிருக்கும் மாமன்ற உறுப்பினர் பதவி,அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.நன்றாக பணி செய்து எம் எல் ஏ வாகவும் அமைச்சராகவும் உயர வேண்டும். மாமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
விழாவில் வரவேற்புரையை ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஜாபர் ஏற்று நடத்தினார்.
– சதீஷ் முத்து
சென்னை மாவட்ட செய்தியாளர்