பதட்டத்தில் பழனிசாமி.! குழப்பத்தில் அதிமுக.
அதிமுகவின் ஒன்றைத் தலைமை விவகாரம் தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோரின் ஆதரவு எங்களுக்கே இருக்கிறது நாளை நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி பழனிசாமியை கட்சியின் அதிகாரமிக்க நபராக ஆக்கிவிடுவோம் என்கிறார்கள் பழனிசாமி தரப்பினர்.
அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட அதிமுகவின் அமைப்பு விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் அளிக்காவிட்டால் அந்த தீர்மானம் செல்லாது. எனவே கட்சியை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டு கைப்பற்றி விடலாம் என்ற பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்கிறார்கள் பன்னீர் செல்வம் தரப்பினர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு நடைபெற கூடாது என தடை கோரியும், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்குகளை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கட்சியில் பெரும்பாண்மை பழனிச்சாமிக்குத் தான் இருக்கிறது. அதேசமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அதில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு இருவரும் இணைந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக் கொள்ளும். இதனால் பழனிசாமி தரப்பினர் பன்னீர்செல்வம் தரப்பில் பேசியுள்ளனர்.
அப்போது பிரச்சினை செய்யாமல் கட்சியின் ஒற்றைத் தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், தலைவர், அவைத் தலைவர் உயர் மட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட எந்தப் பதவிகளையும் வழங்கத் தயார் என தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரம் கோடி அன்பளிப்பு எனவும் பேசியுள்ளனர். ஆனால் ஒற்றைத் தலைமைக்கு இப்போது விட்டுக் கொடுத்தால் தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என பன்னீர்செல்வம் மறுத்திருக்கிறார்.
பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க லாம், அவரது ஒப்புதல் இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மீண்டும் ஒருமுறை இரட்டை இலை சின்னம் முடக்கப் படலாம் என்கிறார்கள் பன்னீர் செல்வம் தரப்பினர்.